மாணவர்கள் இல்லாத 8,000 பள்ளிகளில் 20,000 ஆசிரியர்கள் பணியில் – மத்திய கல்வி அமைச்சக புள்ளிவிவரம்
நாடு முழுவதும் 2024–25 கல்வியாண்டில் மட்டும், சுமார் 8,000 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இல்லாமல் உள்ளது என மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரத் தரவுகள் தெரிவிக்கின்றன. அதிலும், இந்த பள்ளிகளில் 20,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, நாட்டில் மொத்தம் 7,993 பள்ளிகளில் ஒரு மாணவரும் சேர்க்கப்படவில்லை. இது கடந்த கல்வியாண்டை விட 38 சதவீதம் குறைவானது. 2023–24 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகள் 12,954 என பதிவாகியிருந்தன.
இவ்வாண்டில் மாணவர் சேர்க்கை இல்லாத அந்த 7,993 பள்ளிகளில் மொத்தம் 20,817 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அதில் 17,965 ஆசிரியர்கள் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மேலும், மாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகளின் எண்ணிக்கையிலும் மேற்கு வங்கமே 3,812 பள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
தெலங்கானா 2,245 பள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், மத்திய பிரதேசம் 463 பள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது. இந்த பள்ளிகளில் தெலங்கானாவில் 1,106 ஆசிரியர்களும், மத்திய பிரதேசத்தில் 223 ஆசிரியர்களும் பணிபுரிகின்றனர். அதேசமயம், உத்தரப் பிரதேசத்தில் 81 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இல்லை எனத் தரவுகள் கூறுகின்றன.
அதே நேரத்தில், நாட்டில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டும் பணியாற்றும் சுமார் ஒரு லட்சம் பள்ளிகளில் மொத்தம் 33 லட்சம் மாணவர்கள் கல்வி கற்றுவருகின்றனர். இதில் ஆந்திரா மாநிலம் முதலிடம் வகிக்கிறது. அதன் பின்னர் உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.
2022–23 மற்றும் 2023–24 கல்வியாண்டுகளை ஒப்பிடுகையில், இக்காலகட்டத்தில் ‘ஒரே ஆசிரியர் பள்ளிகளின்’ எண்ணிக்கை 6 சதவீதம் குறைந்துள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஹரியானா, மகாராஷ்டிரா, கோவா, அசாம், இமாச்சல் பிரதேசம், சத்தீஸ்கர், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா மாநிலங்களிலும், புதுச்சேரி, லட்சத்தீவு, அந்தமான் நிகோபார் தீவுகள், சண்டிகர், டெல்லி போன்ற யூனியன் பிரதேசங்களிலும் மாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகள் எதுவும் இல்லை என அமைச்சகம் தெரிவித்துள்ளது.