‘எங்கள் தைரியத்தை சோதிக்க வேண்டாம்’ – பாகிஸ்தானுக்கு ஆப்கன் அமைச்சரின் எச்சரிக்கை
40 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் அமைதியும் வளர்ச்சியும் நிலவுகிறது. இந்த நிலையில், ஆப்கானியர்களின் தைரியத்தை சோதிக்கக் கூடாது என பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முட்டாகி.
அரசு முறைப் பயணமாக நேற்று டெல்லி வந்த அவர், இன்று தனது குழுவினருடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரைச் சந்தித்து கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே சமீபத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு எங்கள் நாட்டில் அமைதி நிலவுகிறது; அதைக் குலைக்கும் முயற்சி ஏற்றுக்கொள்ளப்படாது.
எங்கள் தைரியத்தை சோதிக்க நினைக்கும் எவரும், சோவியத் யூனியன், அமெரிக்கா, நேட்டோ போன்ற நாடுகளிடம் ஆப்கானிஸ்தானைப் பற்றி கேட்டு தெரிந்துகொள்ளட்டும் — எங்களைச் சவால் செய்வது எவ்வளவு கடினம் என்பதை அவர்கள் விளங்கிக் கொள்வார்கள்.”
மேலும் அவர் கூறியதாவது:
“பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பில் விரிவான பேச்சுவார்த்தை நடைபெற்றது. எந்த நாட்டுக்கும் எதிராக ஆப்கானிஸ்தானை யாரும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம். எல்லைத் தாண்டிய தாக்குதல்கள் பிரச்சினையைத் தீர்க்காது என்பதை பாகிஸ்தான் உணர வேண்டும். ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் எல்லை மீறல் நடவடிக்கைகளை நாங்கள் கண்டிக்கிறோம். ஆப்கானியர்களின் பொறுமையையும் தைரியத்தையும் சவால் செய்யாதீர்கள். அனைத்து நாடுகளுடனும் நல்லுறவு பேணும் சமநிலையான கொள்கையையே எங்கள் நாடு பின்பற்றுகிறது.”
சமீபத்திய மாதங்களில், எல்லைத் தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக ஆப்கானிஸ்தான்–பாகிஸ்தான் உறவுகள் பதட்டமடைந்துள்ளன. இதன் பின்னணியில், இந்தியா ஆப்கானிஸ்தானுடனான உறவை மேலும் வலுப்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.