சென்னை கொளத்தூரில் ரூ.53 கோடியில் சர்வதேச தரத்தில் வண்ண மீன் வர்த்தக மையம் திறப்பு
நாட்டிலேயே முதல்முறையாக சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்ட வண்ண மீன் வர்த்தக மையத்தை, சென்னை கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். மேலும், வண்ண மீன் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு கடை ஒதுக்கீட்டு ஆணைகளையும் வழங்கினார்.
சிஎம்டிஏ சார்பில் ரூ.53 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த மையம், வில்லிவாக்கம் சிவசக்தி நகரில் 15,945 சதுர மீட்டர் நிலப்பரப்பில், 11,650 சதுர மீட்டர் கட்டிட பரப்பளவில் அமைந்துள்ளது. மொத்தம் 188 கடைகள், 5 உணவகங்கள், அலுவலகங்கள், மீன் காட்சியகங்கள், கழிப்பறைகள், வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட அனைத்து நவீன வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
தரை தளத்தில் 64 கடைகள் மற்றும் இரண்டு உருளை வடிவ மீன் காட்சியகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் தளத்தில் 70 கடைகள், இரண்டாம் தளத்தில் 54 கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், 200 இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் 188 நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கொளத்தூர் வண்ண மீன் வர்த்தகம் பல தசாப்தங்களாக நாட்டிலேயே முக்கிய மையமாக திகழ்கிறது. இப்பகுதியில் சுமார் 500 குடும்பங்கள் வண்ண மீன் உற்பத்தி மற்றும் விற்பனையை நம்பி வாழ்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு, 2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் முதன்முறையாக உலகத் தரத்திலான வண்ண மீன் வர்த்தக மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
திறப்பு விழாவில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், பி.கே. சேகர்பாபு, மேயர் ஆர். பிரியா, வீட்டு வசதித் துறை செயலர் காகர்லா உஷா, மீன்வளத்துறை செயலர் நா. சுப்பையன், சிஎம்டிஏ முதன்மை செயல் அலுவலர் அ. சிவஞானம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.