“இது முழு சமூகத்தின் சாதனை” — அமைதி நோபல் வென்ற மரியா கொரினா மச்சாடோ நெகிழ்ச்சி
2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் ஜனநாயகப் போராட்டத்தின் முன்னோடியாக விளங்கும் மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. “வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைக்காக அயராது குரல் கொடுத்து, சர்வாதிகார ஆட்சியில் இருந்து விடுபடப் போராடியதற்காக” இந்த விருது வழங்கப்படுவதாக ஸ்வீடிஷ் அகாடமி தெரிவித்துள்ளது.
விருது அறிவிக்கப்பட்ட செய்தியை நார்வே நோபல் நிறுவனத்தின் இயக்குநர் கிறிஸ்டியன் பெர்க் ஹார்ப்விகென் நேரடியாகத் தெரிவித்தபோது, மரியா கொரினா கண்ணீர் மல்கியதாக கூறப்படுகிறது.
அவர் அதிர்ச்சி மற்றும் உணர்ச்சியுடன் கூறியதாவது:
“ஓ மை காட்… என்னிடம் வார்த்தைகளே இல்லை. நான் ஒரு தனிநபர் மட்டுமே. இது ஓர் இயக்கம் — ஒரு முழு சமூகத்தின் சாதனை. இதற்காக நன்றி. நான் இதற்கு தகுதியானவர் அல்ல என்று உணர்கிறேன்.”
தொடர்ந்து அவர் கூறியதாவது:
“இது வெனிசுலா மக்களுக்காக வழங்கப்பட்ட பெருமை. அவர்களின் சார்பாக நான் கவுரவப்படுகிறேன். நாங்கள் இன்னும் எங்கள் இலக்கை அடையவில்லை, ஆனால் உறுதியுடன் அதை நோக்கி செல்கிறோம். நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம்.”
யார் இந்த மரியா கொரினா மச்சாடோ?
‘வெனிசுலாவின் இரும்புப் பெண்மணி’ என அழைக்கப்படும் மரியா கொரினா, கடந்த 14 மாதங்களாக தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தாலும் நாட்டை விட்டு வெளியேற மறுத்த அவர், மக்களிடையே பேராதரவைப் பெற்றுள்ளார்.
அவர் வெனிசுலா ராணுவ ஆட்சியை அகற்றவும், நாட்டில் அமைதியான ஜனநாயகம் மலரவும் தொடர்ந்து போராடி வருகிறார். பல்வேறு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து அமைதியான ஜனநாயக மாற்றத்திற்கான இயக்கத்தை உருவாக்கியுள்ளார்.
அவரது தைரியம், பணிவு மற்றும் சமூகநலம் சார்ந்த நோக்கம் காரணமாகவே அமைதிக்கான நோபல் விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது என்று சர்வதேச அரசியல் வட்டாரங்கள் பாராட்டுகின்றன.