“இதனால்தான் சச்சின் டெண்டுல்கர் ஒரு பெரிய மனுஷன்” – நெகிழ்ச்சியடைந்த பிரவீன் ஆம்ரே
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் “லெஜண்ட்” என போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர், தனது நினைவாற்றலுக்காக பிரபலமானவர். அவரின் ஞாபக சக்தி யானையின் நினைவுடன் ஒப்பிடப்படுவது வழக்கம். அந்த நினைவாற்றலின் சான்றாகும் ஒரு பழைய சம்பவத்தை, முன்னாள் இந்திய வீரர் பிரவீன் ஆம்ரே சமீபத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கரின் சிறுவயது பயிற்சியாளர் ராமாகந்த் அச்ரேக்கர், ஒருமுறை சச்சினிடம் “பிரவீன் ஆம்ரேவின் பேட்டிங்கை கவனித்து பார்” என்று கூறியிருந்தார். அப்போது ஆம்ரே, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற யுவா-19 டூரிலிருந்து திரும்பியிருந்தார்.
அவரது ஆட்டத்தைப் பார்ப்பதற்காக சென்ற சச்சினின் கவனம், ஆம்ரேவின் கிரிக்கெட் கிட் பேக்கில் இருந்த வெளிநாட்டு ஸ்போர்ட்ஸ் ஷூக்கள் மீது சென்றது. ஷர்தாஸ்ரம் வித்யாமந்திரில் ஆம்ரே, சச்சினின் மூத்தவர் என்பதால், அந்த ஷூக்களை கேட்டுக் கொள்ள சச்சின் தயங்கினார். ஆனால் அவரது ஆர்வத்தை கவனித்த ஆம்ரே,
“நீ சதம் அடித்தால், அந்த ஷூக்கள் உனக்கே,”
என்று சச்சினுக்கு சவால் விடுத்தார்.
சமீபத்திய ஒரு நிகழ்ச்சியில் இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது:
“அவரது பேட்டிங்கையும், அவரிடம் இருந்த சாதனங்களையும் — பேட், கிளவ்ஸ், ஷூ, எல்லாவற்றையும் — நாங்கள் ஆர்வமாகப் பார்த்தோம். அவரிடம் இருந்த அந்த வெளிநாட்டு ஷூக்களைப் பார்த்தவுடனே, அதை நமக்காக எப்படியாவது வாங்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.
பிரவீன் என்னிடம் ‘நீ சதம் அடித்தால் ஷூ உனக்கே’ என்றார். நான் சதம் அடித்தேன். ஆனால் அவரிடம் சென்று ஷூ தருவீர்களா என்று கேட்கும் தைரியம் எனக்கில்லை. ஆனால் அவர் தானாகவே எனக்கு அந்த ஷூக்களைத் தந்தார்.
என் வாழ்க்கையில் நான் பெற்ற முதல் தரமான கிரிக்கெட் ஷூ அது தான். அதை நான் ஒருபோதும் மறக்க முடியாது.”
இந்தச் சம்பவத்தை நினைவில் வைத்திருந்த சச்சினை பார்த்து பிரவீன் ஆம்ரே நெகிழ்ந்து கூறியதாவது:
“இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் சச்சின் அதை நினைவில் வைத்திருக்கிறார் என்பதே என்னை ஆச்சரியப்பட வைத்தது. எனக்கு அது முற்றிலும் மறந்துபோன விஷயம். இது 1987 அல்லது 1988-ல் நடந்ததாக நினைக்கிறேன்.
இதுதான் சச்சினை ஒரு ‘பெரிய மனிதர்’ ஆக்கிய குணம். அவர் ஒரு சிறந்த வீரர் மட்டுமல்ல, மனம் பெரியவர். அந்த ஷூக்கள் அப்போதைய காலத்தில் அரிதாக கிடைத்த வெளிநாட்டு மாடல். அதை நான் ஒரு சரியான வீரருக்கே கொடுத்தேன் என்பதில் இப்போது பெருமை அடைகிறேன்,”
என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் பிரவீன் ஆம்ரே.