ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்தின் தயாரிப்பு திமிர்த்தனமானது – இயன் போத்தம் கடும் விமர்சனம்
இங்கிலாந்து அணியின் ஆஷஸ் தொடருக்கான தயாரிப்பு முறையில் திமிர்த்தனம் காணப்படுகிறது என்று முன்னாள் ஆல் ரவுண்டர் இயன் போத்தம் கடுமையாக சாடியுள்ளார்.
நவம்பர் இறுதியில் தொடங்கவுள்ள ஆஷஸ் டெஸ்ட் தொடர் முன், இங்கிலாந்து அணி நியூஸிலாந்தில் ஆறு குறைந்த ஓவர் வெள்ளைப்பந்து போட்டிகளில் மட்டுமே பங்கேற்கிறது. இதை விமர்சித்த போத்தம், “சிகப்புப் பந்து டெஸ்ட் தொடருக்கு வெள்ளைப்பந்து ஆட்டங்கள் மூலம் எப்படி தயார் ஆக முடியும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தப் போட்டிகள் முடிந்தவுடன், இங்கிலாந்து அணி இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் வார்ம் அப் ஆட்டத்தில் பங்கேற்கிறது. ஆனால் போத்தம் கூறுவதாவது, “முன்னாள் காலங்களில் ஆஸ்திரேலிய ஷெஃபீல்ட் ஷீல்ட் அணிகளுடன் ரெட் பால் பயிற்சி ஆட்டங்கள் அல்லது முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவோம். இப்போது அந்த வழக்கம் இல்லை. இப்போது ஒரு ‘ஏ’ அணியுடன் மட்டுமே விளையாடுவது ஒரு திமிர்தனமான செயல்,” என்றார்.
1978-79 மற்றும் 1986/87 ஆஷஸ் தொடர்களில் இங்கிலாந்துக்கு வெற்றி பெற்றதில் முக்கிய பங்காற்றியவர் போத்தம். தனது அனுபவத்தை நினைவுகூர்ந்த அவர்,
“ஒரு மாகாண அணியுடன் கூட விளையாடவில்லை. இது முழுக்க திமிர்தனம் தான். ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றி பெற சிகப்புப் பந்தில் பயிற்சி ஆட வேண்டும்.
நாங்கள் நிறைய போட்டிகளில் விளையாடுகிறோம் என்று சொல்கிறார்கள், ஆனால் உண்மையில் போதுமான அளவுக்கு விளையாடவில்லை. ஆஸ்திரேலியாவில் விளையாடுவது ஒரு கடினமான அனுபவம் — அங்குள்ள வெப்பம், பவுன்ஸ், ரசிகர்கள், ஆஸ்திரேலிய வீரர்களின் வாய்ப்பேச்சு — இவை அனைத்தும் 24.5 மில்லியன் மக்களை எதிர்கொள்வதைப் போல தான்,” எனக் கூறினார்.
மேலும், அவர் தொடர்ந்து,
“பவுலர்கள் சரியான தயாரிப்பை பெற முடியவில்லை. உடற்பயிற்சி கூடங்களில் பயிற்சி செய்வது மட்டுமே போதாது; விளையாட்டில்தான் உடல்தகுதி உருவாகும்.
மார்க் உட், ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ், பிரைடன் கார்ஸ் — இவர்கள் எல்லாரும் காயங்களில் இருந்து பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் போதுமான அளவுக்கு ஆடாததால்தான் இந்த நிலைமை.
தொடக்க ஓவரிலேயே மார்க் உட் அல்லது ஜோப்ரா ஆர்ச்சர், ஸ்டோக்ஸ் பவுலிங் செய்ய முடியவில்லை என்றால், அந்தப் போட்டியின் கதை அங்கேயே முடிந்து விடும். இதுதான் மிகப் பெரிய கவலை,” என்று அவர் குறிப்பிட்டார்.