‘கபாலி’ வெளியீட்டுக்கு முன்பே ரூ.100 கோடி லாபம் ஈட்டியது: பா.ரஞ்சித் விளக்கம்
‘கபாலி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்னரே 100 கோடி ரூபாய் லாபம் ஈட்டியதாக இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் நடிப்பில் வெளியான ‘பைசன்’ திரைப்படம் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதை முன்னிட்டு பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் ‘பைசன்’ படக்குழுவினரும், தயாரிப்பாளர்களில் ஒருவராக இருக்கும் பா.ரஞ்சித்தும் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பில் பா.ரஞ்சித் பேசும்போது, படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்ததோடு, தன்னைக் குறித்த விமர்சனங்களுக்கும் பதிலளித்தார். அவர் கூறியதாவது:
“என்னை விமர்சிக்கும்போது, ரஜினியை வைத்து இப்படிச் சினிமா எடுக்கலாமா? அவரை இப்படிப் பேச வைக்கலாமா? எனப் பலர் கேள்வி எழுப்பினர். அப்போது என்ன செய்யலாம் என்று தெரியவில்லை. ‘மெட்ராஸ்’ படத்தை மக்கள் கொண்டாடியது போலவே ‘கபாலி’யையும் கொண்டாடுவார்கள் என நினைத்தேன். அந்தப் படத்தின் உண்மையான வெற்றி எவ்வளவு பெரியது என்பதை தயாரிப்பாளர் தாணுவே அறிவார்.
‘கபாலி’ வெளியாவதற்குமே முன் 100 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது. அது ஒரு வணிக ரீதியான மிகப் பெரிய வெற்றி. பல படங்கள் வணிக ரீதியில் வெற்றி பெற்றாலும், விமர்சன ரீதியில் அவ்வளவு பேசப்படுவதில்லை. கதைப் பகுதியில் சில குறைகள் இருந்திருக்கலாம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், ரஜினியை இப்படிப் பேச வைக்கலாமா என்ற கேள்வியை ஏற்றுக்கொள்ள முடியாது.
ரஜினி சார் ‘கபாலி’ நல்ல படம், நான் நன்றாக இயக்கியிருக்கிறேன் என்று நம்பினார். அதனால் தான் அவர் மீண்டும் ‘காலா’ படத்திற்கும் வாய்ப்பு கொடுத்தார்.
‘கபாலி’க்குப் பிறகு சமூக விமர்சனங்கள் பல வந்தபோதும், ஏன் மீண்டும் ரஜினியுடன் வேலை செய்தேன் என்று சிலர் கேள்வி கேட்டனர். உண்மையில், ‘காலா’வை ஒரு பெரிய கமர்ஷியல் படமாக எடுத்து பணம் சம்பாதிக்கலாமே! ஆனால், நிலமற்ற மக்களுக்கு நிலம் வேண்டும் என்ற கருத்தை சமூக ரீதியில் வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அந்தப் படத்தை எடுத்தேன்.”
என்று பா.ரஞ்சித் கூறினார்.