உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ‘மேப்பில்ஸ்’ செயலியை அனைவரும் பயன்படுத்துங்கள்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அழைப்பு
சுதேசி தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்க பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி வரும் நிலையில், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட செயலிகளைப் பயன்படுத்தி முன்னுதாரணமாக உள்ளார்.
முதலில் அலுவலகப் பயன்பாட்டிற்காக வெளிநாட்டு மென்பொருள்களை விட்டு விலகி, இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஜோஹோ மென்பொருள் சேவை தளத்திற்கே (Zoho) மாறியதாக அவர் சமீபத்தில் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, ஜோஹோ அரட்டை (chat) செயலியையும் அவர் தன் தினசரி பணிகளில் பயன்படுத்தி வருகிறார்.
இப்போது அஸ்வினி வைஷ்ணவ், உள்நாட்டில் உருவாக்கப்பட்ட பயண வழிகாட்டி செயலியான “மேப்பில்ஸ்” (Mappls) ஐ பயன்படுத்த தொடங்கியுள்ளார்.
அவர் தனது காரில் மேப்பில்ஸ் செயலியைப் பயன்படுத்தி பயணம் செய்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, “இந்தியர்கள் அனைவரும் இந்த சுதேசி செயலியை பயன்படுத்தி நாட்டின் டிஜிட்டல் சுயநிறைவை வலுப்படுத்துங்கள்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கு பதிலளித்த மேப் மை இந்தியா (MapMyIndia) நிறுவனம், மத்திய அமைச்சருக்கு நன்றி தெரிவித்து, “இந்த ஊக்குவிப்பு எங்களுக்கு பெரும் பெருமை” என்று தெரிவித்துள்ளது.
மேப் மை இந்தியா நிறுவனம், அமெரிக்காவில் பணியாற்றிய ராகேஷ் மற்றும் ராஷ்மி வர்மா தம்பதியரால் தொடங்கப்பட்டது. முதலில் “CE Info Systems Ltd” எனத் தொடங்கிய இந்த நிறுவனம் பின்னர் “MapMyIndia” என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்த நிறுவனம் நாடு முழுவதும் சிறிய தெருக்களையும் வரைபடமிடும் பணியை மேற்கொண்டு, இந்தியாவின் முதல் முழுமையான டிஜிட்டல் மேப் சேவையை உருவாக்கியது. இதன் மேம்படுத்தப்பட்ட வடிவமே “மேப்பில்ஸ்” (Mappls) என அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.