‘ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசை அர்ப்பணிக்கிறேன்’ – மரியா கொரினா ட்வீட்
அமைதிக்கான நோபல் பரிசை வென்ற வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, அந்த விருதை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு அர்ப்பணிக்கிறேன் என்று சமூக வலைதளமான எக்ஸில் (முன்னாள் ட்விட்டர்) பதிவிட்டுள்ளார்.
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்படும் வரிசையில், அமைதிக்கான நோபல் பரிசு மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டதாக நார்வே நோபல் கமிட்டி அறிவித்தது. வெனிசுலாவில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க அமைதி வழியில் போராடி வருபவராக அவர் பாராட்டப்பட்டுள்ளார்.
பரிசு அறிவிக்கப்பட்டதையடுத்து மரியா கொரினா தனது பதிவில் கூறியிருந்தார்:
“வெனிசுலா மக்களின் நீண்ட போராட்டத்துக்கான அங்கீகாரம் இது. ஜனநாயக சுதந்திரம் நம் கையில் இருப்பதை உணர்கிறோம். நமக்கு தொடர்ந்து ஆதரவளித்த அதிபர் ட்ரம்ப், அமெரிக்க மக்கள் மற்றும் உலகின் அனைத்து ஜனநாயக நாடுகளுக்கும் நன்றி.
இந்த விருதை வெனிசுலாவில் இன்னும் துன்புறும் மக்களுக்கும், நம் நோக்கத்துக்கு உறுதுணையாக இருந்த அதிபர் ட்ரம்ப்புக்கும் அர்ப்பணிக்கிறேன்.”
யார் இந்த மரியா கொரினா?
1967-ஆம் ஆண்டு வெனிசுலாவின் கரகஸில் பிறந்த மரியா கொரினா மச்சாடோ, கடந்த இருபது ஆண்டுகளாக ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடி வருகிறார். கடந்த 14 மாதங்களாக அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தலைமறைவாக வாழ்ந்தும், நாடு விட்டு வெளியேற மறுத்துள்ளார்.
அவர் வெனிசுலாவில் இராணுவ ஆதிக்க ஆட்சியை எதிர்த்து எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து அமைதியான ஜனநாயக மாற்றத்துக்காக பாடுபட்டு வருகிறார்.
குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளாக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். ஆனால் இந்த ஆண்டு அந்த பெருமை மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.