தடுப்பூசி செலுத்தாததால் வந்த வினை: ரேபிஸ் பாதிப்பால் நாய் போல் குரைக்கும் சிறுவன்!
உத்தரப்பிரதேசம்:
உத்தரப்பிரதேச மாநிலம் ஜோகிபூர்வா கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன், வெறிநாய் கடித்த பிறகு முழுமையாகத் தடுப்பூசி செலுத்தாத காரணத்தால் ரேபிஸ் (Rabies) நோயால் பாதிக்கப்பட்டு, நாய் போன்றே குரைக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
அலட்சியத்தின் விளைவு:
கரண் என்ற அந்தச் சிறுவனை சில நாட்களுக்கு முன்பு வெறிநாய் ஒன்று கடித்தது. நாய் கடித்தால் முறையான கால இடைவெளியில் 4 முறை ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயமாகும். ஆனால், கரண் இரண்டு முறை மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொண்டு, மற்ற இரண்டு ஊசிகளைத் தவிர்த்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாக, ரேபிஸ் வைரஸ் அவரது நரம்பு மண்டலத்தைத் தாக்கியுள்ளது.
பயங்கரமான அறிகுறிகள்:
தற்போது ரேபிஸ் தொற்றின் தீவிர நிலையை எட்டியுள்ள கரண், தண்ணீரைப் பார்த்து நடுங்கும் ‘ஹைட்ரோபோபியா’ (Hydrophobia) அறிகுறியால் அவதிப்படுவதோடு, நாயைப் போலவே குரைக்கவும் தொடங்கினார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும், ரேபிஸ் நோய் முற்றிய நிலையில் அதிலிருந்து உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என மருத்துவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.