சிரஞ்சீவியின் பெயர், குரல், புகைப்படம் அனுமதியின்றி பயன்படுத்தத் தடை — நீதிமன்றம் உத்தரவு
நடிகர் சிரஞ்சீவியின் பெயர், குரல், புகைப்படம் மற்றும் பிற அடையாளங்களை அவரின் அனுமதியின்றி எந்த நிறுவனமும் வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தக்கூடாது என, ஹைதராபாத் நகர சிவில் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இணைய தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் திரை பிரபலங்களின் பெயர், குரல், உருவம் போன்றவற்றை தவறாகப் பயன்படுத்தும் வழக்குகள் அதிகரித்துள்ள நிலையில், பல நடிகர்கள் இதுகுறித்து நீதிமன்றத்தை நாடி வருகின்றனர். முன்பாக அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், கரண் ஜோஹர், நாகார்ஜுனா, அக்ஷய் குமார், ஹிருத்திக் ரோஷன், ஆஷா போன்ஸ்லே உள்ளிட்டோருக்கும் இதேபோன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் வழங்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், நடிகர் சிரஞ்சீவியும், தனது அடையாளம் மற்றும் புகழை அனுமதியின்றி விளம்பரங்கள் அல்லது வணிக நோக்கத்திற்குப் பயன்படுத்துவதைத் தடுக்கக் கோரி மனுதாக்கல் செய்தார்.
மனுவில் அவர் கூறியதாவது:
“சில ஆன்லைன் விற்பனையாளர்கள் என் பெயர், குரல், ‘மெகா ஸ்டார்’, ‘சிரு’ போன்ற அடையாளங்களை அனுமதியின்றி விளம்பரங்களில் பயன்படுத்தி வருகின்றனர். இது என் நற்பெயருக்கும் சமூக மரியாதைக்கும் தீங்காகும்,” என குறிப்பிடப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி எஸ். சஷிதர் ரெட்டி, சிரஞ்சீவியின் பெயர், புகைப்படம், குரல் மற்றும் பிற அடையாளங்களை அனுமதியின்றி எந்த வகையிலும் பயன்படுத்தக் கூடாது என இடைக்காலத் தடை உத்தரவிட்டார்.