ரேக்ளா போட்டிகளில் சாதனை படைத்த காங்கயம் காளை ரூ.30 லட்சத்துக்கு விற்பனை!
உடுமலை அருகே நடைபெற்ற ரேக்ளா பந்தயங்களில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த காங்கயம் இனக் காளை ஒன்று, ரூ.30 லட்சம் எனும் அதிகபட்ச விலைக்கு விற்பனையாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடுமலை அருகே உள்ள மருள்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஹரி வீரராகவன், காங்கயம் இனக் காளைகளை வளர்த்து வருகிறார். இவரது மூன்று வயது “மயிலை” என்ற காளை, அண்மையில் கோவை மாவட்டம் நெகமம் செட்டிக்காபாளையத்தில் நடைபெற்ற மாநில அளவிலான ரேக்ளா பந்தயத்தில், 200 மீட்டர் தூரத்தை 16 விநாடிகளில் கடந்து முதல் பரிசை வென்றது.
இந்த அபார சாதனையின் பின்னர், காளை ரூ.30 லட்சத்துக்கு விற்பனையாகியுள்ளது. இதுவரை ரேக்ளா காளைகளில் அதிகபட்ச விலை ரூ.22 லட்சம் என்ற சாதனையை இது முறியடித்துள்ளது.
விவசாயிகள் தெரிவித்ததாவது:
“நாட்டு மாடுகளின் முக்கியத்துவத்தை பேணும் நோக்கில் காங்கயம் இன மாடுகளை வளர்த்து வருகிறோம். ரேக்ளா போட்டிகள் அதன் திறமையையும் வலிமையையும் வெளிப்படுத்துகின்றன. மயிலை காளை இதுவரை 25-க்கும் மேற்பட்ட போட்டிகளில் முதலிடம் பெற்றுள்ளது என்பது பெருமையாகும்,” என தெரிவித்தனர்.
காங்கயம் இனக் காளைகளின் வலிமை, வேகம், மற்றும் தாங்கும் சக்தி காரணமாக, இவ்வகை மாடுகளுக்கு மாநிலம் முழுவதும் தேவையும் பெருமையும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.