அமெரிக்கா – தென் கொரியாவிற்கு வடகொரியா கடும் பதிலடி: அதிபர் கிம் ஜாங் உன் முன்னிலையில் ஏவுகணை சோதனை!
பியோங்யாங்: அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கூட்டு ராணுவப் பயிற்சிக்குத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதமாக, வடகொரியா 2-வது முறையாகப் பிரம்மாண்ட ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. இது கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
துல்லியமான இலக்கு:
அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கூட்டுப் பயிற்சி, தங்களது நாட்டின் பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் என வடகொரியா கருதுகிறது. இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், ‘சோ ஹியோன்’ என்ற போர்க்கப்பலில் இருந்து ஏவுகணையை ஏவி வடகொரியா சோதித்தது. இந்த ஏவுகணை அந்நாட்டின் மேற்கு கடற்கரையில் உள்ள இலக்குத் தீவுகளைத் துல்லியமாகத் தாக்கி அழித்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அரசியல் வாரிசுடன் கிம் ஜாங் உன்:
இந்த முக்கியமான ஏவுகணை சோதனையை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அவரது 14 வயது மகள் ஆகியோர் ஒரு அறையில் அமர்ந்து நேரில் பார்வையிட்டனர். இந்த ஒத்திகையின் போது, “நம்பகமான அணு ஆயுதத் தடுப்புத் திறனை எப்போதும் பராமரிக்க வேண்டும்” என்று தனது நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு அதிபர் கிம் ஜாங் உன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மகளுக்கு முக்கியத்துவம்:
கடந்த 2022-ம் ஆண்டு முதல் ராணுவ அணிவகுப்புகள் மற்றும் ஏவுகணை சோதனைகளில் தனது மகளை கிம் ஜாங் உன் தொடர்ந்து பங்கேற்கச் செய்து வருகிறார். இது அவர் தனது மகளை அரசியல் வாரிசாக உருவாக்குவதற்கான முயற்சியே என்று சர்வதேச உளவு அமைப்புகள் கருதுகின்றன. அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி வடகொரியா நடத்தியுள்ள இந்தச் சோதனை உலக நாடுகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.