2025–26 நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.6% வளர்ச்சி பெறும் – சர்வதேச நிதியம் அறிக்கை
இந்திய பொருளாதாரம் 2025–26 நிதியாண்டில் 6.6 சதவீத வளர்ச்சி அடையும் என சர்வதேச நிதியம் (IMF) தனது புதிய உலக பொருளாதார முன்னோட்ட அறிக்கையில் கணித்துள்ளது.
அமெரிக்கா பல நாடுகளுக்கு வரிகளை உயர்த்தியதாலும், சில நாடுகளுடன் புதிய வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டதாலும், உலகளவில் பொருளாதார நிச்சயமற்ற நிலை அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, சர்வதேச நிதியம் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது:
“இந்தியாவே வேகமாக வளர்ந்து வரும் முக்கிய நாடுகளில் ஒன்றாக தொடர்ந்து இருக்கும். 2025–26 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும். இதற்கு முதல் காலாண்டில் ஏற்பட்ட வலுவான உள்நாட்டு வளர்ச்சியே முக்கிய காரணம். அமெரிக்காவின் வரி விதிப்பின் தாக்கத்தை இந்தியாவின் உற்பத்தி மற்றும் சேவை துறைகள் சமநிலைப்படுத்தியுள்ளன.”
சீனாவின் வளர்ச்சி 4.8 சதவீதமாக இருக்கும் என IMF தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவின் வளர்ச்சி வேகம் அடுத்த ஆண்டு சற்றே குறைந்து 2026–27 நிதியாண்டில் 6.2 சதவீதமாக இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிக்கையின் படி, உலகளாவிய பொருளாதார வளர்ச்சி இந்த நிதியாண்டில் 3.2%, அடுத்த நிதியாண்டில் 3.1% ஆக குறையும். பணவீக்கம் உலகம் முழுவதும் குறைவடையும் போக்கில் உள்ளது.
வளர்ந்த நாடுகளில் சராசரி வளர்ச்சி 1.6%, வளர்ந்து வரும் நாடுகளில் 4.2% ஆக இருக்கும். இது அடுத்தாண்டு 0.2 சதவீதம் குறையலாம்.
வளர்ந்த நாடுகளில் ஸ்பெயின் அதிகளவில் முன்னேறும் நாடாக இருக்கும் (2.9%), அதனை தொடர்ந்து அமெரிக்கா (1.9%), பிரேசில் (2.4%), கனடா (1.2%) மற்றும் ஜப்பான் (1.1%) ஆகியவை அமைந்துள்ளன.
இந்தியாவின் வளர்ச்சி விகிதம் உலகளவில் சிறப்பாக இருந்தாலும், மொத்த உலக பொருளாதார வளர்ச்சி 3.3 சதவீதத்திலிருந்து 2.6 சதவீதமாக குறையக்கூடும் என அறிக்கை எச்சரிக்கிறது.