“பல்கலைக்கழக சட்டத் திருத்தம் வாபஸ் பெறப்பட வேண்டும்” – கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கைக் குழு வலியுறுத்தல்
தனியார் பல்கலைக்கழக சட்டத் திருத்த முன்வடிவு மீளாய்வு செய்யப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கூறியுள்ள நிலையில், தமிழக அரசு அடுத்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அந்த முன்வடிவை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கைக் குழு கோரியுள்ளது.
இந்த கோரிக்கையை, குழுவின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சோ. சுரேஷ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது:
“2019-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட தனியார் பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் செய்து, அரசு உதவி பெறும் சில கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றும் முன்வடிவு, சமீபத்திய சட்டப்பேரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
இச்சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வந்தால், கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் ஊதிய, பணிப் பாதுகாப்பு பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும், கல்விக் கட்டணங்கள் உயர்த்தப்படுவதால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மாணவர்கள் உயர் கல்வியில் பின்தங்க வாய்ப்பு அதிகம். இதனைக் கண்டித்து கல்லூரி ஆசிரியர் சங்கங்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன.”
“ஏழை மாணவர்களின் கல்வியை பாதிக்கும் இந்தச் சட்டத் திருத்தத்திற்கு எதிராக கல்வியாளர்கள், அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. இந்த எதிர்ப்பை கருத்தில் கொண்டு, உயர்கல்வித் துறை அமைச்சர் மறு ஆய்வுக்கு தயாராக இருப்பதாக அறிவித்ததை நாங்கள் வரவேற்கிறோம். அதேவேளை, அடுத்த சட்டப்பேரவை கூட்டத்தில் இச்சட்டத் திருத்த முன்வடிவை முழுமையாக திரும்பப் பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என அவர் கூறியுள்ளார்.