பெய்ரூட் ஒரு ‘பேய் நகரம்’: இஸ்ரேல் தாக்குதலால் உருக்குலைந்த லெபனான் – 8 லட்சம் மக்கள் வெளியேற்றம்!
லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட், இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையிலான தீவிரப் போர் காரணமாகத் தற்போது மக்கள் நடமாட்டமற்ற வெறிச்சோடிய ‘பேய் நகரமாக’ மாறியுள்ளது. எப்போதும் பரபரப்பாகவும், மக்கள் நெருக்கம் மிகுந்தும் காணப்படும் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகள், தற்போது இடிந்து விழுந்த கட்டிடங்களுடனும், நிசப்தமான வீதிகளுடனும் காட்சிளிக்கின்றன.
இஸ்ரேலிய ராணுவம் பெய்ரூட் பகுதியில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறுமாறு விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, சுமார் 5 லட்சம் முதல் 8 லட்சம் வரையிலான மக்கள் தங்களின் வாழ்விடங்களை விட்டு ஒரே இரவில் வெளியேறியுள்ளனர். எங்கு பார்த்தாலும் சிதிலமடைந்த கட்டிடங்களும், அவ்வப்போது கேட்கும் குண்டுவெடிப்புச் சத்தங்களுமே எஞ்சியுள்ளன.
மற்றொரு முக்கியச் செய்தியாக, பெய்ரூட்டின் மையப்பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் மீது இஸ்ரேல் நடத்திய துல்லியமான ட்ரோன் தாக்குதலில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) லெபனான் பிரிவைச் சேர்ந்த ஐந்து முக்கியத் தளபதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தத் தாக்குதல் லெபனான் மற்றும் ஈரான் தரப்பிற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.