பெங்களூருவில் சிலிண்டர் தட்டுப்பாடு: இன்று முதல் உணவகங்கள் காலவரம்பின்றி மூடல்!
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக வணிக ரீதியிலான சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பெங்களூருவில் இன்று முதல் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்துள்ள போரினால், முக்கியப் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலரைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் இதன் தாக்கம் எதிரொலிக்கத் தொடங்கியுள்ள நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர் விலை 60 ரூபாயும், வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை 115 ரூபாயும் உயர்ந்துள்ளது. குறிப்பாக, வர்த்தக சிலிண்டர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 150 ரூபாய் தள்ளுபடி ரத்து செய்யப்பட்டதால், ஹோட்டல் உரிமையாளர்களுக்கு ஒரு சிலிண்டருக்குச் சுமார் 265 ரூபாய் கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. இந்தத் திடீர் விலையேற்றம் மற்றும் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாகத் தொழிலை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், பெங்களூருவில் உணவகங்களைத் தற்காலிகமாக மூட உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.