“முதல்வராக சித்தராமையா நீடிப்பார்” – சர்ச்சைக்கு மகன் யதீந்திரா விளக்கம்
கர்நாடகாவில் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் முதல்வராக வேண்டும் என்ற கோரிக்கை அவரது ஆதரவாளர்களிடமிருந்து வலுப்பெற்று வரும் நிலையில், அந்த விவகாரம் புதிய திருப்பத்தை எடுத்துள்ளது.
சமீபத்தில், முதல்வர் சித்தராமையாவின் மகனும் காங்கிரஸ் எம்எல்சியுமான யதீந்திரா, “எனது தந்தை அரசியல் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் உள்ளார். அவருக்குப் பிறகு அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி தலைமையேற்றால் நல்லது” என கூறியிருந்தார். இந்தக் கருத்து, டி.கே. சிவகுமார் ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, முதல்வர் சித்தராமையா விளக்கமளித்து,
“யதீந்திரா கூறியது கொள்கை ரீதியான பார்வை மட்டுமே. அதை அடுத்த முதல்வர் யார் என்பதற்கான கருத்தாக எடுத்துக்கொள்ளக் கூடாது,” என்றார்.
இந்நிலையில், சர்ச்சை பெருகியதைத் தொடர்ந்து, யதீந்திரா விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
“எனது பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மேலிடம் நோட்டீஸ் அனுப்பினால், உரிய விளக்கம் அளிக்கத் தயாராக இருக்கிறேன். எனது தந்தை சித்தராமையா 2028 ஆம் ஆண்டு வரை முதல்வராகத் தொடர்வார்,” என அவர் தெரிவித்துள்ளார்.