இட்லிக்கு டூடுல் வெளியிட்ட கூகுள்: இன்று உலக இட்லி தினம் கூட இல்லை!
தென்னிந்தியர்களின் அன்றாட காலை உணவாக விளங்கும் இட்லிக்கு, கூகுள் வியப்பூட்டும் வகையில் டூடுல் வெளியிட்டுள்ளது.
பொதுவாக உலக இட்லி தினம் மார்ச் 30 அன்று கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் டூடுல் வெளியிடுவது வழக்கம். ஆனால் இம்முறை, எந்தத் தொடர்பும் இல்லாத அக்டோபர் 11 அன்று கூகுள் இந்த சிறப்பான இட்லி டூடுலை வெளியிட்டிருப்பது இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
கூகுள் டூடுல்கள் பொதுவாக முக்கிய தலைவர்களை நினைவுகூர, முக்கிய தினங்கள் அல்லது கலாச்சாரங்களை கொண்டாடும் வகையில் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில், இன்று தென்னிந்திய உணவுக் கலாச்சாரத்தின் பிரதிநிதியான இட்லியைக் கொண்டாடும் நோக்கில் இந்த டூடுல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த டூடுலில் கூகுள் லோகோ, இட்லி மாவு கலவை, இட்லி வேகவைக்கும் பாத்திரம், சட்னி, சாம்பார், இட்லிப் பொடி ஆகியவை இணைந்து அழகாக காட்சியளிக்கின்றன. அதுவும் வாழை இலையின் மேல் அலங்கரிக்கப்பட்டிருப்பது தென்னிந்திய உணவு கலாச்சாரத்தின் சாரத்தைக் காட்டுகிறது.
கூகுள் தனது விளக்கத்தில்,
“இன்றைய கூகுள் டூடுல் தென்னிந்திய உணவான இட்லியைப் பாராட்டுகிறது. இது அரிசி, உளுந்து மாவில் தயாரிக்கப்படும் ஒரு பாரம்பரிய உணவாகும்,”
என்று குறிப்பிட்டுள்ளது.
அக்டோபர் 11 அன்று இட்லி அல்லது உணவு கலாச்சாரத்துடன் தொடர்பான எந்த நினைவுநாளும் இல்லாத நிலையில், கூகுள் தன்னிச்சையாக தென்னிந்திய உணவைக் கொண்டாடும் விதமாக இந்த டூடுலை வெளியிட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் பிரபலமான இட்லி, இந்தியாவின் மென்மையான, ஆரோக்கியமான, கலாச்சார அடையாளமாக இருப்பதால், அதனை உலகளவில் கொண்டாடும் நோக்கிலேயே கூகுள் இந்த முயற்சியை எடுத்ததாக கருதப்படுகிறது.