பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் திட்டம் இல்லை: போர் பதற்றங்களுக்கு மத்தியில் மத்திய அரசு அதிரடி விளக்கம்
புதுடெல்லி: மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள போதிலும், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே போர் தீவிரமடைந்துள்ளதால், வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது.
வளைகுடா நாடுகளில் கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளதால் உலக நாடுகளுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், இந்தியா இந்த விலை உயர்வு முடிவை எடுக்கவில்லை. இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் கையிருப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், தற்போதைய விநியோகத் தட்டுப்பாட்டை எளிதாகச் சமாளிக்க முடியும் என்று மத்திய அரசு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிலிருந்து திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (LNG) இறக்குமதி செய்வது குறித்தும் இந்தியா தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச அளவில் எரிபொருள் நெருக்கடி நிலவினாலும், உள்நாட்டில் விலை உயர்வு இருக்காது என்ற அரசின் இந்த அறிவிப்பு சாமானிய மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.