ஈரானுடன் முழு பலத்துடன் போர் தொடரும்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிரடி அறிவிப்பு
ஜெருசலேம்: ஈரானுக்கு எதிரான போரை முழு பலத்துடன் தொடரப்போவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சபதம் செய்துள்ளார். இது குறித்துத் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த அவர், ஈரானுடனான மோதலின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் உலகிற்குப் பல ஆச்சரியங்களை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார். இஸ்ரேலின் இந்த வெற்றி, முழு உலகிற்கும் அச்சுறுத்தலாக விளங்கும் அணுசக்தி ஆபத்துகளை நிரந்தரமாக நீக்கும் என்றும் அவர் உறுதிப்படக் கூறினார்.
அயதுல்லா கமேனியின் ஆட்சி உலக நாடுகளுக்குப் பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதை அனைவரும் உணர்ந்துள்ளதாகக் குறிப்பிட்ட நெதன்யாகு, ஈரான் தனது அண்டை நாடுகளான 12 தேசங்களைத் தாக்கி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகச் சுட்டிக்காட்டினார். ஈரான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட அந்த நாடுகளுக்கு இஸ்ரேல் எப்போதும் ஆதரவாக இருக்கும் என்றும் அவர் தனது பேட்டியின் போது தெரிவித்தார்.