போரை நிறுத்த CIA-விடம் ஈரான் ரகசியத் துாது? “இனி பேச்சுக்கே இடமில்லை” – அதிபர் ட்ரம்ப் அதிரடி!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் ஈரானின் முக்கியத் தளபதிகள் மற்றும் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் நிலை குலைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் ரகசியமாக அமெரிக்காவின் சி.ஐ.ஏ (C.I.A) அமைப்பைத் தொடர்பு கொண்டதாக எழுந்த செய்திகள் சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ரகசியத் தொடர்பும் ஈரானின் மறுப்பும்:
நியூயார்க் டைம்ஸ் (NYT) வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஈரானின் உளவுத்துறை அமைச்சக அதிகாரிகள் ஒரு மூன்றாவது நாட்டின் உளவு அமைப்பு வழியாக சி.ஐ.ஏ-வை அணுகி, போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைக்கு ஒரு வாய்ப்பு வழங்குமாறு கோரியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்தச் செய்தியை “முற்றிலும் பொய் மற்றும் உளவியல் போர்” என்று ஈரான் உளவுத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. ஐ.நா-வுக்கான ஈரான் தூதர் அலி பஹ்ரைனி கூறுகையில், அமெரிக்காவுடன் நேரடியாவோ அல்லது மறைமுகமாகவோ எந்தத் தொடர்பும் கொள்ளவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அதிபர் ட்ரம்ப்பின் கடும் நிலைப்பாடு:
இந்த விவகாரம் குறித்துப் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் பேச்சுவார்த்தைக்குத் தற்போது ஆர்வம் காட்டுவதை உறுதிப்படுத்தும் விதமாகப் பேசினார். “அவர்கள் இப்போது அழைக்கிறார்கள், எப்படி ஒரு ஒப்பந்தம் (Deal) செய்வது என்று கேட்கிறார்கள். ஆனால், அதற்கு இப்போது காலம் கடந்துவிட்டது. அவர்களுக்கு இருந்த வாய்ப்பை அவர்கள் தவறவிட்டுவிட்டார்கள்” என்று ட்ரம்ப் கூறியுள்ளார். மேலும், ஈரான் “நிபந்தனையற்ற சரணடைதலை” (Unconditional Surrender) அறிவித்தால் மட்டுமே போரை நிறுத்துவது பற்றி யோசிக்க முடியும் என்றும், அதன் பின்னரே ஈரானை மீண்டும் கட்டியெழுப்ப (MIGA – Make Iran Great Again) அமெரிக்கா உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் எச்சரிக்கை:
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்கா ரகசியமாக ஈரானுடன் ஏதேனும் ஒப்பந்தம் செய்கிறதா என்று வெள்ளை மாளிகையைத் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அதற்கு அமெரிக்கா, ஈரானுடன் எந்த ரகசியப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. தனது இலக்குகள் அனைத்தும் நிறைவேறும் வரை தாக்குதல் ஓயாது என்பதில் இஸ்ரேல் உறுதியாக உள்ளது.