2 மற்றும் 3-வது குழந்தைகளுக்கு ரூ. 25,000: ஆந்திர அரசின் புதிய ‘மக்கள் தொகை மேலாண்மை கொள்கை’!
ஆந்திர பிரதேசத்தில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தைச் சமாளிக்கவும், எதிர்காலத்தில் முதியோர் மக்கள் தொகை அதிகரிப்பதைத் தவிர்க்கவும், முதலமைச்சர் சந்திரபாபு நாயிடு ஒரு புதிய அதிரடி ஊக்கத் திட்டத்தை மாநிலச் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். ‘மக்கள்தொகைக் கட்டுப்பாடு’ என்ற நிலையிலிருந்து மாறி, தற்போது ‘மக்கள்தொகை பராமரிப்பு’ (Population Care) என்ற புதிய கொள்கையை அரசு கையில் எடுத்துள்ளது.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
- நிதியுதவி: 2-வது அல்லது 3-வது குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு, பிரசவத்தின் போது ஒருமுறை நிதியுதவியாக 25,000 ரூபாய் வழங்கப்படும்.
- ஊட்டச்சத்து உதவி: 3-வது குழந்தைக்கு 5 வயது வரை மாதம் 1,000 ரூபாய் ஊட்டச்சத்து உதவித் தொகையாக வழங்கப்படும்.
- இலவச கல்வி: 3-வது குழந்தைக்கு 18 வயது வரை அரசு மற்றும் உண்டு உறைவிடப் பள்ளிகளில் இலவசக் கல்வி வழங்கப்படும்.
- விடுப்பு வசதிகள்: அரசுப் பணியில் உள்ள பெண்களுக்கு 3-வது குழந்தைக்கு ஒரு வருடம் (12 மாதங்கள்) முழு சம்பளத்துடன் மகப்பேறு விடுப்பும், தந்தைகளுக்கு 2 மாதங்கள் தந்தைவழி விடுப்பும் (Paternity Leave) வழங்கப்படும்.
- மருத்துவ வசதி: குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகளுக்கு அரசு சார்பில் பொது-தனியார் பங்களிப்பு (PPP) முறையில் IVF சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு மானிய விலையில் சிகிச்சை அளிக்கப்படும்.
ஏன் இந்த மாற்றம்?
ஆந்திராவின் மொத்தக் கருவுறுதல் விகிதம் (TFR) தற்போது 1.5 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இது மக்கள் தொகையைச் சமநிலையில் வைக்கத் தேவையான 2.1 என்ற விகிதத்தை விடக் குறைவாகும். இதே நிலை நீடித்தால், ஜப்பான் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளைப் போலவே ஆந்திராவிலும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து, பொருளாதார வளர்ச்சி பாதிக்கும் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது.
இந்த வரைவுக் கொள்கை மக்கள் கருத்துக்காக வெளியிடப்பட்டுள்ள நிலையில், வரும் ஏப்ரல் 1, 2026 முதல் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது.