ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி மறைவு: டெல்லியில் உள்ள தூதரகத்திற்கு நேரில் சென்று இந்தியா இரங்கல்!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவுக்கு இந்திய அரசு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 28-ஆம் தேதி நிகழ்ந்த இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி டெல்லியில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு நேரில் சென்றார். அங்குள்ள ஈரான் தூதரைச் சந்தித்து இந்தியாவின் இரங்கலைப் பதிவு செய்த அவர், தூதரகத்தில் வைக்கப்பட்டிருந்த இரங்கல் புத்தகத்திலும் கையெழுத்திட்டார்.
இதனிடையே, அலி கமேனியின் மறைவைத் தொடர்ந்து ஈரானில் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், 7 நாட்கள் பொது விடுமுறை அளிக்கப்படும் என்றும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கமேனிக்கு அடுத்தபடியாக அவரது மகன் முஜ்தபா கமேனி புதிய உச்ச தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உச்ச தலைவரின் மறைவு ஈரானில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.