ஜப்பான் தனியார் விண்வெளித் துறைக்கு மீண்டும் பின்னடைவு: 3-வது முறையாக வெடித்துச் சிதறிய ராக்கெட்!
டோக்கியோ:
தனியார் விண்வெளித் துறையில் உலக அளவில் தடம் பதிக்க முயன்று வரும் ஜப்பானின் கனவு, தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஜப்பானைச் சேர்ந்த தனியார் நிறுவனமான ‘ஸ்பேஸ் ஒன்’ (Space One) தயாரித்த ‘கைரோஸ் 3’ (Kairos 3) ராக்கெட், விண்ணில் ஏவப்பட்ட சில வினாடிகளிலேயே வெடித்துச் சிதறி தோல்வியடைந்தது.
சம்பவம் குறித்த விவரம்:
மேற்கு ஜப்பானில் உள்ள ‘ஸ்பேஸ் போர்ட் கி’ ஏவுதளத்திலிருந்து, இந்திய நேரப்படி வியாழக்கிழமை காலை 7:40 மணிக்கு இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ஏவப்பட்ட 69 வினாடிகளில், பசிபிக் பெருங்கடலுக்கு மேல் சுமார் 29 கிலோமீட்டர் உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ராக்கெட் தானாகவே வெடித்துச் சிதறியது.
தொடர் தோல்விகள்:
ஸ்பேஸ் ஒன் நிறுவனம் 2024-ஆம் ஆண்டில் மேற்கொண்ட முந்தைய இரண்டு ஏவுதல் முயற்சிகளும் தோல்வியில் முடிந்த நிலையில், தற்போது மூன்றாவது முறையாகவும் தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்த முறை, தைவான் விண்வெளி முகமை மற்றும் ஜப்பானின் ஆர்க்கெஜ் ஸ்பேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான 5 சோதனை செயற்கைக்கோள்கள் இந்த ராக்கெட்டில் வைக்கப்பட்டிருந்தன. ராக்கெட் வெடித்ததில் அந்த செயற்கைக்கோள்களும் முழுமையாக அழிந்தன.
காரணம் என்ன?
ராக்கெட் ஏவப்பட்ட சிறிது நேரத்திலேயே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை உணர்ந்த தானியங்கிப் பாதுகாப்பு அமைப்பு, பாதிப்புகளைத் தவிர்க்கும் பொருட்டு ராக்கெட்டைத் தானாகவே அழித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இருப்பினும், இந்த விபத்துக்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய ஜப்பான் விண்வெளித் துறை நிபுணர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.