கொசுவை அழிக்க யானை விலை: ஈரானின் மலிவு விலை ட்ரோன் வியூகத்தால் திணறும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்!
வாஷிங்டன் / டெஹ்ரான்:
ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானின் “மலிவு விலை போர் தந்திரம்” அமெரிக்காவுக்கு பெரும் ஆயுதப் பற்றாக்குறையை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. அணு ஆயுத ஒப்பந்தத்திற்குப் பணியாத ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
மலிவான ட்ரோன்கள் – விலையுயர்ந்த ஏவுகணைகள்:
இந்த போரில் ஈரான் பெரும்பாலும் ரஷ்ய தயாரிப்பான ‘ஷாகித்’ (Shahed) ரக ட்ரோன்களையே பயன்படுத்துகிறது. ஒரு ட்ரோனின் உற்பத்தி விலை வெறும் 20,000 அமெரிக்க டாலர்கள் மட்டுமே. ஆனால், இவற்றை இடைமறித்து அழிக்க அமெரிக்கா பயன்படுத்தும் ஏவுகணைகளின் விலை தலா 4 மில்லியன் டாலர்கள் ஆகும். அதாவது, “கொசுவை அழிக்க யானை விலை” என்ற பழமொழிக்கு ஏற்ப, ஈரானின் மலிவான ஆயுதங்களைச் சமாளிக்க அமெரிக்கா தனது கோடிக்கணக்கான மதிப்புள்ள அதிநவீன ஆயுதங்களைச் செலவிட்டு வருகிறது.
ஆயுதக் கிடங்கு காலியாகும் அபாயம்:
ஈரானிடம் சுமார் ஒரு லட்சம் ஷாகித் ட்ரோன்கள் கைவசம் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு நாளைக்கு 750 ட்ரோன்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ஈரான், ஒரே நேரத்தில் பல இடங்களைத் தாக்கும் வியூகத்தைக் கையாண்டு வருகிறது. கடந்த ஜூன் மாதம் நடந்த 12 நாள் போரிலேயே, இஸ்ரேல் தனது கையிருப்பில் இருந்த 25 சதவீத ‘தாட்’ (THAAD) ரக இடைமறிப்பு ஏவுகணைகளைப் பயன்படுத்திவிட்டது. ஒவ்வொரு ‘தாட்’ ஏவுகணையின் விலையும் 15 மில்லியன் டாலர்கள் என்பதோடு, அவற்றை மீண்டும் உற்பத்தி செய்ய 8 ஆண்டுகள் வரை ஆகும் என்பது அமெரிக்காவுக்குப் பெரும் பின்னடைவாகும்.
அமெரிக்காவின் புதிய வியூகம்:
Interceptor ஏவுகணைகள் மட்டுமின்றி, கடலில் இருந்து ஏவப்படும் ‘டொமாஹாக்’ (Tomahawk) ஏவுகணைகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பென்டகன் கவலை தெரிவித்துள்ளது. இந்த நிதி மற்றும் ஆயுதச் சுமையைக் குறைக்க, ஈரான் ட்ரோன்களுக்கு எதிராக 28,000 டாலர் மதிப்பிலான மலிவு விலை ‘APKWS’ ராக்கெட்டுகளைப் பயன்படுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதேபோல், இஸ்ரேல் தனது ‘அயன் பீம்’ (Iron Beam) லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
எதிர்பார்க்கப்படும் அடுத்தகட்ட நகர்வு:
ஈரானிடம் 2,000-க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் தயார் நிலையில் உள்ளன. அமெரிக்காவின் ஏவுகணை தடுப்பு அமைப்புகளைச் செலவழிக்க வைத்துவிட்டு, பின்னர் ஏவுகணைகளை ஏவுவதே ஈரானின் திட்டம் என்று கருதப்படுகிறது. இதை முறியடிக்க ஈரானின் ஏவுதளங்களை அமெரிக்கா தரைமட்டமாக்கி வருகிறது. எவ்வாறாயினும், இந்தப் போர் நான்கு வாரங்களுக்கு நீடித்தால், அமெரிக்கா கடுமையான ஆயுதப் பற்றாக்குறையைச் சந்திக்க நேரிடும் என அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.