“இந்தியா, சீனா வளர்ச்சியைத் தடுக்கவே அமெரிக்கா போர்களை உருவாக்குகிறது” – ஈரானியப் பிரதிநிதி குற்றச்சாட்டு!
சென்னை: இந்தியா மற்றும் சீனாவின் வளர்ச்சியை முடக்கவே உலகெங்கிலும் அமெரிக்கா பல போர்களை உருவாக்கி வருவதாக ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமேனியின் இந்தியப் பிரதிநிதி டாக்டர் அப்துல் மஜித் ஹக்கீம் இலாஹி பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு ஈரான் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். இருப்பினும், அந்தப் பேச்சுவார்த்தையானது ஈரானின் கண்ணியத்தை மதிக்கும் வகையிலும், ஒரு நாடு மற்றொரு நாட்டிற்கு உத்தரவிடும் வகையில் அமையக் கூடாது என்றும் அவர் நிபந்தனை விதித்தார்.
ஈரான் இதுவரை யார் மீதும் முதலில் தாக்குதல் நடத்தவில்லை என்றும், தற்போது நடப்பவை அனைத்தும் தற்காப்பு நடவடிக்கைகளே என்றும் அவர் விளக்கமளித்தார். மேலும், அமெரிக்கா தனக்கு இணையாக மற்றொரு வல்லரசு நாடு உருவாவதை ஒருபோதும் விரும்புவதில்லை எனக் குறிப்பிட்ட அவர், குறிப்பாக இந்தியாவோ அல்லது சீனாவோ சக்திவாய்ந்த நாடுகளாக உருவெடுப்பதைத் தடுக்கவே திட்டமிட்டுப் போர்ச் சூழல்களை அமெரிக்கா உருவாக்கி வருவதாகச் சாடினார். மேற்காசியாவில் நிலவும் பதற்றத்திற்கு நடுவே இவரது இந்தக் கருத்து சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.