போர் பதற்றம்: பதுங்கு குழிகளில் ‘பூரிம்’ பண்டிகையைக் கொண்டாடிய இஸ்ரேல் மக்கள்!
டெல் அவிவ்: ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையிலும், இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரில் பொதுமக்கள் பதுங்கு குழிகளுக்குள் புகழ்பெற்ற ‘பூரிம்’ (Purim) பண்டிகையைக் உற்சாகமாகக் கொண்டாடினர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக இந்தப் பண்டிகை ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு பெரிய அளவில் கொண்டாடத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ஈரான் மீதான தாக்குதல்கள் மற்றும் வான்வழிப் போர் அச்சுறுத்தல் காரணமாக பொது இடங்களில் கூடத் தடை விதிக்கப்பட்டு, பெரும்பாலான நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
இருப்பினும், கொண்டாட்டத்தைக் கைவிட விரும்பாத மக்கள், டெல் அவிவ் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு காப்பகத்தில் (Bunker) ஒன்று திரண்டனர். அங்கு பல வண்ண உடைகளை அணிந்தும், பாரம்பரிய இசை வாத்தியங்களுக்கு ஏற்ப நடனமாடியும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். போரின் நிழலிலும் தங்களின் கலாச்சார அடையாளத்தைப் போற்றும் வகையில் அமைந்த இந்த நிகழ்வு, சர்வதேச அளவில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.