ஆந்திராவில் ரூ.87,570 கோடி முதலீட்டில் கூகுள் டேட்டா சென்டர்: டெல்லியில் ஒப்பந்தம் கையெழுத்து
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் கூகுள் நிறுவனம் ரூ.87,570 கோடி செலவில் ஒரு பெரும் டேட்டா சென்டரை அமைக்க உள்ளது. இதற்காக இன்று டெல்லியில் ஆந்திர அரசு மற்றும் மத்திய அரசுடன் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
இந்த டேட்டா சென்டர் 1 ஜிகா வாட் திறன் கொண்ட மிகப்பெரிய வசதியாகும். ரூ.10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.87,570 கோடி) மதிப்பீட்டில் உருவாகும் இது நாட்டின் மிகப்பெரிய நேரடி வெளிநாட்டு முதலீட்டாக கருதப்படுகிறது.
ஏற்கனவே, முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஐடி துறை அமைச்சர் நாரா லோகேஷ் மற்றும் ஆந்திர அரசு உயர் அதிகாரிகள் டெல்லிக்கு சென்று ஒப்பந்த நடவடிக்கைகளுக்கு முன்னேற்பாடுகள் செய்தனர். பின்னர் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்தித்தார். சந்திரபாபு நாயுடு, பிரதமருக்கு பூங்கொத்து வழங்கி, கூகுள் நிறுவனத்தை ஆந்திராவில் வரவழைத்ததற்கான நடவடிக்கைகளுக்கான நன்றியை தெரிவித்தார்.
மேலும், நவம்பர் 14 மற்றும் 15 தேதிகளில் நடைபெற உள்ள இரு நாட்கள் முதலீட்டாளர் மாநாட்டுக்கும் பிரதமர் மோடி வர வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.