‘அதானி குழுமத்தில் முதலீடு செய்வதில் எல்ஐசிக்கு அழுத்தம்’ – காங்கிரஸ் நாடாளுமன்ற விசாரணை கோரிக்கை
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) தனது நிதியை அதானி குழும நிறுவனங்களில் தவறாக முதலீடு செய்ய பயன்படுத்தியதாகக் கூறி, காங்கிரஸ் நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு முழுமையான விசாரணை நடத்தக் கோரியுள்ளது.
காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில், “மோடி அரசு மற்றும் அதானி குழுமம் (‘மோதானி’) எல்ஐசியின் 30 கோடி பாலிசித் தரர்களின் சேமிப்புகளை எவ்வாறு தவறாக பயன்படுத்தியதாக செய்திகள் வெளியாவதைப் பொறுத்து அதிர்ச்சி ஏற்படுகிறது. மே 2025-ல் இந்திய நிதித்துறை அதிகாரிகள் சுமார் ரூ.33,000 கோடியை அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்ய எல்ஐசிக்கு திட்டம் வகுக்க அழுத்தம் கொடுத்ததாக உள்ள ஆவணங்கள் கூறுகின்றன.
அதானி குழுமத்தில் நம்பிக்கை ஏற்படுத்தி, மற்ற முதலீட்டாளர்கள் அவர்களையும் ஈர்க்கும் நோக்கத்திலேயே இந்த நடவடிக்கை எடுத்ததாகவும், அமெரிக்காவில் செப். 21, 2024 அன்று கவுதம் அதானி மற்றும் ஏழு கூட்டாளிகளுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னரும், எல்ஐசி ஒரு நாளில் ரூ.7,850 கோடி இழப்பை சந்தித்த நிலையில் பொதுப் பணத்தை நண்பர்களின் நிறுவனங்களில் முதலீடு செய்வது நிதி வீணடிப்பு அல்லவா எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மேலும் அதானி குழுமம் ரூ.2,000 கோடி லஞ்சம் வழங்க திட்டமிட்டதாகவும், அமெரிக்காவின் எஸ்இசி சம்மன் அனுப்பவும் மோடி அரசு கிட்டத்தட்ட ஒரு வருடமாக மறுக்கின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெய்ராம் ரமேஷ், “இது மிகப் பெரிய நிதி மோசடி. எல்ஐசி அதானி குழுமத்தில் முதலீடு செய்ய நிர்ப்பந்தப்படுவது தொடர்பாக நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு விசாரணை நடத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.
எல்ஐசியின் பதில்
முன்னதாக, எல்ஐசி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
- வெளிப்புறக் குற்றச்சாட்டுகள் தவறானவை, ஆதாரமற்றவை.
- எல்ஐசியின் முதலீட்டு முடிவுகள் வாரியத்தின் அங்கீகாரத்திற்குப் பிறகு, விரிவான ஆய்வின் மூலம் தனித்து எடுக்கப்படுகின்றன.
- நிதித்துறை அல்லது வேறு எந்த அமைப்புக்கும் இதில் பங்கு இல்லை.
- எல்ஐசியின் அனைத்து முதலீட்டு முடிவுகளும் சட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களுக்கு இணங்க, பங்குதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்படுகின்றன.
- வெளியிடப்பட்ட கட்டுரைகள் எல்ஐசியின் நற்பெயரையும், செயல்முறையையும் பாதிக்கக்கூடிய நோக்கத்துடன் உள்ளன.