மேற்காசிய பதற்றம்: சவுதி இளவரசர் மற்றும் பஹ்ரைன் மன்னருடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை
புதுடெல்லி:
மேற்காசிய நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத் மற்றும் பஹ்ரைன் மன்னர் ஹமத் பின் இசா அல் கலீபா ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக முக்கிய ஆலோசனை நடத்தினார்.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வரும் நேரடித் தாக்குதல்களால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியற்ற சூழல் நிலவுகிறது. குறிப்பாக, ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேல் படைகளின் தாக்குதலும், அதற்குப் பதிலடியாக அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் நடத்தி வரும் தாக்குதல்களும் போரைத் தீவிரப்படுத்தியுள்ளன.
இந்த இக்கட்டான நிலையில், சம்பந்தப்பட்ட நாடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்தார். இரு நாட்டுத் தலைவர்களுடனான உரையாடலின் போது, அங்குள்ள இந்திய சமூகத்தினரின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டார். மேலும், சமீபத்திய வன்முறைச் சம்பவங்களுக்குத் தனது கண்டனத்தைப் பதிவு செய்த பிரதமர், பிராந்தியத்தில் அமைதி திரும்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பேசி, அங்குள்ள இந்தியர்களைப் பாதுகாத்ததற்காகப் பிரதமர் நன்றி தெரிவித்திருந்த நிலையில், தற்போது சவுதி மற்றும் பஹ்ரைன் தலைவர்களுடனான இந்த உரையாடல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.