டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடரில் தகுதி பெற்றார் எலெனா ரைபகினா
ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்று வரும் பான் பசிபிக் ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டியில் கஜகஸ்தானைச் சேர்ந்த எலெனா ரைபகினா சிறப்பாக விளையாடி அரை இறுதிக்கு முன்னேறியுள்ளார்.
ஒற்றையர் பிரிவு காலிறுதியில், அவர் கனடா வீராங்கனை விக்டோரியா எம்போகோவுடன் மோதினார். ஆட்டத்தின் முழு நேரத்திலும் ஆட்சியைச் செலுத்திய ரைபகினா, 6-3, 7-6 (4) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.
2022ஆம் ஆண்டு விம்பிள்டன் சாம்பியனான ரைபகினா, அரை இறுதியில் செக் குடியரசின் லின்டா நோஸ்கோவாவை எதிர்கொள்ள உள்ளார். பான் பசிபிக் ஓபனில் அரை இறுதிக்கு சென்றதன் மூலம், அவர் உலக தரவரிசையில் 8வது இடத்தைப் பிடித்துள்ளார். இதன் அடிப்படையில் அடுத்த மாதம் சவுதி அரேபியாவில் நடைபெறவுள்ள டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடரில் கலந்து கொள்ளும் கடைசி வீராங்கனையாக அவர் தேர்வாகியுள்ளார்.
உலக தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள வீராங்கனைகளே இந்த டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடரில் பங்கேற்பார்கள். இதில் அரினா சபலென்கா, இகா ஸ்வியாடெக், கோ கோ காஃப், அமன்டா அனிசிமோவா, மேடிசன் கீஸ், ஜெசிகா பெகுலா, ஜாஸ்மின் பவுலினி ஆகியோர் ஏற்கனவே தகுதி பெற்றுள்ளனர். இப்போது அவர்களுடன் எலெனா ரைபகினாவும் இணைந்துள்ளார்.