மலையப்ப சுவாமிக்கு உலர் பழங்கள் மற்றும் மலர் அலங்காரம் – திருப்பதி பிரம்மோற்சவத்தில் சிறப்பு திருமஞ்சனம்
திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழாவின் ஒரு பகுதியாக, உற்சவரான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு நேற்று (4-ம் நாள்) சிறப்பு திருமஞ்சன சேவை நடைபெற்றது.
பிரம்மோற்சவத்தின் ஒன்பது நாட்களும் கோயிலின் ரங்கநாயக மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளுக்கு திருமஞ்சன சேவை (அபிஷேகம்) நடைபெறுவது மரபாகும். இதில், நான்காம் மற்றும் ஏழாம் நாள்களில் மலையப்ப சுவாமிக்கு இரு முறை சிறப்பு அபிஷேகம் நடத்துவது வழக்கமாகும்.
அதன்படி, நேற்று நான்காம் நாள் நிகழ்வாக, உற்சவ மூர்த்திகளுக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், குங்குமம், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர், உலர் பழங்கள் மற்றும் மலர்களால் அழகிய அலங்காரம் செய்யப்பட்டது.
பாதாம், பிஸ்தா, உலர் திராட்சை, ஏலக்காய், குங்குமப்பூ, வெட்டிவேர், கொம்பு மஞ்சள், துளசி மற்றும் ரோஜா மலர்களால் செய்யப்பட்ட அந்த அலங்காரம் அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது.
இந்த நிகழ்வில் திருப்பதி சின்ன ஜீயர் சுவாமிகள், திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால், கோயில் நிர்வாகிகள், அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.