சஹாரா பாலைவனத்தில் ‘காப்பான்’ பட பாணியில் வெட்டுக்கிளிப் படைத் தாக்குதல்: வாகன ஓட்டிகள் கடும் அவதி!
சஹாரா: ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனப் பகுதியில் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் மேகக்கூட்டம் போலப் படையெடுத்து வாகனங்கள் மீது மோதும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இயற்கை சீற்றத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படும் இந்த நிகழ்வு, அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது. நடிகர் சூர்யா மற்றும் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘காப்பான்’ திரைப்படத்தில் பயிர்களை அழிக்கும் வெட்டுக்கிளிப் படைகள் குறித்த காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அதே போன்றதொரு சூழல் தற்போது சஹாராவில் நிஜமாகவே அரங்கேறி வருகிறது.
சஹாரா பாலைவனத்தில் சமீபத்தில் பெய்த எதிர்பாராத கனமழை மற்றும் திடீர் தட்பவெப்ப மாற்றமே, இந்த பிரம்மாண்ட வெட்டுக்கிளிப் பெருக்கத்திற்குக் முக்கியக் காரணம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வெட்டுக்கிளிப் படையெடுப்பால் சாலைகளில் செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறும் சூழல் ஏற்பட்டுள்ளதோடு, அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கும் இவை பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன. இதனைத் தடுப்பதற்கான அவசர நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.