போர் நிறுத்தத்தை கண்காணிக்க காசாவில் அமெரிக்க ராணுவ முகாம்
2023 அக்டோபர் மாதம் தொடங்கி இஸ்ரேல் ராணுவத்துக்கும், காசா பகுதியில் செயல்படும் ஹமாஸ் அமைப்பிற்கும் இடையே கடும் மோதல் நீடித்து வந்தது. இதனால் ஏற்பட்ட மனித இழப்புகள் மற்றும் அழிவுகள் உலகளவில் பெரும் கவலைக்குரியனவாக மாறின.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நடுவர் முயற்சியால், எகிப்தின் தலைமையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் கடந்த வாரம் நடைபெற்றன. அதன் விளைவாக, அக்டோபர் 9-ம் தேதி இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்ததும், அக்டோபர் 10-ம் தேதி முதல் போர் நிறுத்தம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது.
அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஹமாஸ் அமைப்பு தங்களிடம் உள்ள இஸ்ரேலிய பிணைக்கைதிகளை 72 மணி நேரத்திற்குள் விடுவிக்க ஒப்புக்கொண்டது.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா, எகிப்து, கத்தார், துருக்கி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் ராணுவ அதிகாரிகள் இணைந்து காசாவில் முகாமிட்டு போர் நிறுத்த நிலைமையை கண்காணிக்க தீர்மானித்துள்ளனர்.
அதன்படி, அமெரிக்கா சார்பில் 200 ராணுவ வீரர்கள் காசாவுக்கு அனுப்பப்பட உள்ளனர். அவர்களில் முதல் குழு நேற்று இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை அடைந்தது. அங்கிருந்து அவர்கள் காசா எல்லைப் பகுதிகளுக்கு சென்றனர்.
மீதமுள்ள வீரர்கள் இந்த வார இறுதிக்குள் இஸ்ரேலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் காசாவில் தற்காலிக முகாம் அமைத்து, போர் நிறுத்த ஒப்பந்தம் முழுமையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் பணியில் ஈடுபட உள்ளனர்.