ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு: ‘மார்டல் காம்பட் 2’ படத்தின் அதிரடி தமிழ் டிரைலர் வெளியீடு!
சென்னை: உலகப்புகழ் பெற்ற வீடியோ கேம் தொடரை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள ஹாலிவுட் திரைப்படமான ‘மார்டல் காம்பட்’ (Mortal Kombat) இரண்டாம் பாகத்தின் தமிழ் டிரைலர் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
கடந்த 1992-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வீடியோ கேம் விளையாட்டு, கடந்த 30 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட தனித்துவமான கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி உலக அளவில் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளது. இதனை மையமாக வைத்து கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான ‘மார்டல் காம்பட்’ முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றியின் தொடர்ச்சியாக தற்போது இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.
அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்தத் திரைப்படம், வரும் மே 15-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நேரடியாகத் திரையரங்குகளில் வெளியாகிறது. டிரைலர் வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.