நீதித்துறை குறித்து சர்ச்சைக்குரிய பாடம்: மன்னிப்பு கோரியது NCERT!
8-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் “நீதித்துறையில் ஊழல்” (Corruption in Judiciary) என்ற தலைப்பில் இடம்பெற்றிருந்த ஒரு பாடப்பிரிவு தேசிய அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்தப் பதிவிற்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் அவர்கள் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். நாட்டின் உயரிய நீதித்துறையின் மாண்பைக் குலைக்கும் வகையில் இத்தகைய கருத்துக்கள் பாடப்புத்தகத்தில் இடம்பெறுவது ஏற்கத்தக்கதல்ல என்று அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, என்சிஇஆர்டி (NCERT) அதிகாரப்பூர்வமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், எதிர்பாராமல் நடந்த இந்தத் தவறுக்காக வருத்தம் தெரிவிப்பதோடு, நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. இந்திய நீதித்துறையைத் தாங்கள் எப்போதும் உயர்வாக மதிப்பதாகவும், இந்தத் தவறு உடனடியாகச் சரி செய்யப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சர்ச்சைக்குரிய அந்தப் பாடப்பகுதி புத்தகத்திலிருந்து முழுமையாக நீக்கப்படும் என்றும், வரும் புதிய கல்வியாண்டிற்குள் அதற்குப் பதிலாக முறையான புதிய பாடம் சேர்க்கப்படும் என்றும் என்சிஇஆர்டி உறுதி அளித்துள்ளது.