ரோஹித் சர்மாவின் 50ஆவது சதம் – விராட் கோலியின் ரன் வேட்டை சாதனை!
சிட்னியில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் தனது 50ஆவது சதத்தைப் பதிவு செய்து புதிய சாதனை படைத்தார் ரோஹித் சர்மா. அதே சமயம், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் 2வது இடத்தை பிடித்து சாதனை படைத்தார் விராட் கோலி.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மாவின் சதம், விராட் கோலியின் அரை சதம் மற்றும் ஹர்ஷித் ராணாவின் சிறப்பான பந்துவீச்சு ஆகியவை இந்திய அணிக்கு 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைத் தந்தன. ஆனால் தொடர் முடிவில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
இன்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா தன்னுடைய பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி சதம் விளாசினார். அனைத்து வடிவிலான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இதுவே அவரது 50ஆவது சதம் ஆகும். டெஸ்டில் 12, ஒருநாளில் 33 மற்றும் டி20 போட்டிகளில் 5 சதங்களை அவர் பதிவு செய்துள்ளார்.
சிட்னியில் ரோஹித் அடித்த இந்த சதம், ஆஸ்திரேலிய மண்ணில் அவர் அடித்த 6ஆவது சதமாகும். இதன் மூலம் ஆஸ்திரேலியாவில் ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்பு விராட் கோலி மற்றும் இலங்கையின் குமார் சங்ககரா தலா 5 சதங்களுடன் சாதனையைப் பகிர்ந்திருந்தனர். இப்போது அதனை முறியடித்துள்ளார் ரோஹித் சர்மா.
விராட் கோலி – ரன் வேட்டையில் இரண்டாம் இடம்
இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி 74 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் சங்ககராவை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தைப் பிடித்தார். சங்ககரா 380 இன்னிங்ஸ்களில் 14,234 ரன்கள் எடுத்திருந்தார், அதேசமயம் கோலி 293 இன்னிங்ஸ்களில் 14,235 ரன்கள் சேர்த்து முன்னேறியுள்ளார். இந்த சாதனையில் சச்சின் டெண்டுல்கர் 452 இன்னிங்ஸ்களில் 18,426 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.