மகாராஷ்டிர பெண் மருத்துவர் தற்கொலை வழக்கு: ஒருவர் கைது – மாநிலம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்
மகாராஷ்டிராவில் பெண் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவரில் ஒருவரான பிரசாந்த் பங்கார் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொரு குற்றவாளியான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பதானே தலைமறைவாகி உள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
சதாரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தோஷி, செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
“பால்டன் தாலுகாவில் நடைபெற்ற பெண் மருத்துவர் தற்கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரசாந்த் பங்கரை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். இன்னொருவரான சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பதானே தலைமறைவாக உள்ளார்; அவரை தேடும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன,” என்றார்.
தற்கொலை விவரம்
சதாரா மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த பெண் மருத்துவர், பால்டன் பகுதியில் உள்ள விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல் நேற்று முன்தினம் இரவு மீட்கப்பட்டது.
அவர் தன் கையிலேயே எழுதிய தற்கொலைக் குறிப்பில், போலீஸ் அதிகாரிகள் கோபால் பதானே மற்றும் பிரசாந்த் பங்கார் தன்னை தொடர்ச்சியாக தொந்தரவு செய்ததாகவும் துன்புறுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
குடும்பத்தின் குற்றச்சாட்டு
மருத்துவரின் சகோதரர் கூறியதாவது:
“என் சகோதரிக்கு காவல்துறையிடமும், சில அரசியல் நபர்களிடமுமிருந்து மிகுந்த அழுத்தம் இருந்தது. தவறான பிரேதப் பரிசோதனை அறிக்கைகளை தயார் செய்ய அழுத்தம் கொடுக்கப்பட்டது. இந்த அழுத்தங்களால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்,” என்றார்.
முன்கூட்டிய புகார் புறக்கணிப்பு
ஜூன் 19 அன்று அந்த பெண் மருத்துவர் பால்டன் துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) அவர்களை நேரில் சந்தித்து, மூன்று போலீஸ் அதிகாரிகள் மீது முறையிட்டிருந்தார். ஆனால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்த வழக்கில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் (எம்.பி.) தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மருத்துவர்களின் போராட்டம்
இந்த சம்பவத்துக்கு எதிராக மகாராஷ்டிரா ரெசிடென்ட் டாக்டர்கள் சங்கம் (MARD) இன்று மும்பையில் உள்ள KEM மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர்.
மாநிலம் முழுவதும் சுமார் 8,000 மருத்துவர்கள் தங்கள் கைகளில் கருப்பு பட்டை அணிந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.