பெண் வேடமிட்டு ஆப்கனிஸ்தானிலிருந்து தப்பியதாக ஒசாமா பின்லேடன் குறித்து முன்னாள் சிஐஏ அதிகாரி அதிர்ச்சி தகவல்
ஆப்கனிஸ்தானின் டோரா போரா மலைப் பகுதியில் சுற்றிவளைக்கப்பட்டிருந்த ஒசாமா பின்லேடன், அப்போது பெண் வேடமணிந்து தப்பியதாக அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ-வின் முன்னாள் அதிகாரி ஜான் கிரியாகோ கூறியுள்ளார்.
9/11 தாக்குதல் நினைவு
2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று, அல் கயிதா அமைப்பைச் சேர்ந்த 19 பயங்கரவாதிகள் நான்கு வர்த்தக விமானங்களை கடத்தினர்.
அவற்றில் இரண்டு விமானங்கள் நியூயார்க் நகரில் இருந்த உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்களை (ட்வின் டவர்ஸ்) தாக்கி அழித்தன.
மூன்றாவது விமானம் அமெரிக்க பாதுகாப்புத் துறை தலைமையகமான பெண்டகனில் மோதியது.
நான்காவது விமானம் பென்சில்வேனியாவில் வயலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
ஒசாமாவை வேட்டையாடிய அமெரிக்கா
இந்த தாக்குதலுக்குப் பிறகு, அதன் பின்னணி நாயகனாகக் கருதப்பட்ட அல் கயிதா தலைவரான ஒசாமா பின்லேடனை பிடிக்க அமெரிக்க பாதுகாப்புப் படைகள் முழு அளவில் நடவடிக்கை தொடங்கின.
அப்போது ஆப்கனிஸ்தானில் இருந்த பின்லேடன், அங்கிருந்து தப்பி பாகிஸ்தானுக்குள் புகுந்து அப்போடாபாத் நகரில் மறைந்து இருந்தார்.
2011 மே 2 அன்று, அமெரிக்க கடற்படையின் சிறப்பு அணியினர் நடத்தி சென்ற ரகசிய நடவடிக்கையில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
“10 ஆண்டுகளுக்கு முன்பே கொல்லப்பட்டிருக்கலாம்” — ஜான் கிரியாகோ
சிஐஏ-வில் 15 ஆண்டுகள் பணியாற்றியதுடன், பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்த ஜான் கிரியாகோ, ஏஎன்ஐக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
“ஒசாமா பின்லேடனும் அல் கயிதா தலைமை குழுவும் டோரா போரா மலைப்பகுதியில் முற்றுகையிடப்பட்டிருந்தனர்.
அவர்கள் தப்பிக்க வழியில்லாமல் முழுமையாக நாங்கள் சுற்றிவளைத்திருந்தோம்.
ஆனால், அந்த நேரத்தில் அமெரிக்க படையின் தளபதியுடன் இருந்த மொழிபெயர்ப்பாளர் ஒருவர் அல் கயிதா ஆதரவாளர் என்பதைக் காணவில்லை.
அவர்களின் சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளை வெளியே அனுப்ப சிறிது நேரம் வேண்டுமென்று கோரிக்கை வந்தது.
‘அதற்குப் பிறகு சரணடைவோம்’ என்றார்கள்.
எங்கள் தளபதி ஜெனரல் பிராங்ஸ், மொழிபெயர்ப்பாளரின் வற்புறுத்தலுக்கிணங்க அதற்கு அனுமதி அளித்தார்.
ஆனால் அடுத்த நாள் விடியற்காலையில் டோரா போரா குகைகள் முழுமையாக காலியாகிவிட்டதை பார்த்தபோது — நாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்பது தெளிவாயிற்று.
அவ்வாறு பின்லேடன் பெண் வேடமணிந்து அங்கிருந்து தப்பியதாக நம்பப்படுகிறது.
அவர் அப்போது பிடிபட்டிருந்தால், 2011-ல் அல்ல, 10 ஆண்டுகளுக்கு முன்பே கொல்லப்பட்டிருப்பார்,” என ஜான் கிரியாகோ தெரிவித்துள்ளார்.