“ஒருதரப்பு வரிகளை கைவிடுங்கள்” – அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு சீனா கடும் வலியுறுத்தல்!
அமெரிக்க உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், மற்ற நாடுகளின் மீது விதிக்கப்படும் ஒருதரப்பு மற்றும் பரஸ்பர வரி விதிப்புகளைக் கைவிடுமாறு டிரம்ப் நிர்வாகத்தை சீனா அதிகாரப்பூர்வமாக வலியுறுத்தியுள்ளது. முன்னதாக, உலக நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது அதிபர் டிரம்ப் விதித்த பரஸ்பர வரிகளை ரத்து செய்து அமெரிக்க உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது. எனினும், இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பொருட்கள் மீது 15 சதவீத வரி விதிக்கும் புதிய பிரகடனத்தில் டிரம்ப் கையொப்பமிட்டார். இந்த புதிய வரி விதிப்பு 150 நாட்களுக்குத் தற்காலிகமாக அமலுக்கு வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கைக்குச் சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்துப் பேசிய சீன வர்த்தக அமைச்சக செய்தி தொடர்பாளர், “வர்த்தகப் போரில் எப்போதுமே யாரும் வெற்றி பெற முடியாது” என்று எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் இத்தகைய ஒருதரப்பு வரி விதிப்பு நடவடிக்கைகள் சர்வதேச வர்த்தக மற்றும் பொருளாதார விதிகளை மீறுவது மட்டுமல்லாமல், அமெரிக்காவின் சொந்த உள்நாட்டுச் சட்டங்களையே மீறுவதாக உள்ளது என்றும் அவர் சாடியுள்ளார். இந்த வரி விதிப்பு விவகாரம் உலகளாவிய பொருளாதாரச் சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.