ஹெட் சாதனை – ஸ்மித்தை விட வேகமாக 3,000 ரன்கள்
சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலியாவின் இடதுகை தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் அசாத்திய சாதனையைப் படைத்தார். அவர் வெறும் 76 ஒருநாள் போட்டிகளிலேயே 3,000 ரன்கள் என்ற முக்கிய மைல்கல்லை எட்டினார். இதற்கு முன் ஸ்டீவ் ஸ்மித் 79 ஆட்டங்களில் அந்த அளவினை எட்டியிருந்தார். எனவே ஹெட், ஸ்மித்தை விட வேகமாக இந்த சாதனையை முடித்துள்ளார்.
இந்த சாதனை ஹெட்டின் இடைவிடாத தாக்குதல்மிகு பேட்டிங் திறமையையும், குறுகிய காலத்தில் அவர் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய நம்பிக்கையான நட்சத்திரமாக உருவெடுத்திருப்பதையும் வெளிப்படுத்துகிறது.
ஸ்டீவ் ஸ்மித் நீண்டநாள் ஆஸ்திரேலியாவின் நம்பிக்கைக்குரிய அனைத்து வடிவங்களிலும் சிறந்த பேட்ஸ்மேனாக கருதப்பட்ட நிலையில், ஹெட் அவருடன் ஒப்பிடத்தக்கவர் அல்ல என்றாலும், அவரை முந்தி இந்த சாதனையைப் படைத்தது ஆஸ்திரேலிய ரசிகர்களை பெரிதும் உற்சாகப்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்திய அணிக்கு எதிராக ஹெட் முக்கியமான போட்டிகளில் பெரும்பாலும் சிறப்பாக ஆடி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடரில் பெர்த் மற்றும் அடிலெய்டில் ஹெட்டை இந்திய பந்துவீச்சாளர்கள் விரைவில் ஆட்டமிழக்கச் செய்திருந்தனர். எனவே இன்றைய ஆட்டத்தில் ஒரு பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டும் என்ற மனநிலையுடன் ஹெட் விளையாடினார். சிராஜ் மற்றும் ஹர்ஷித் ராணாவின் பந்துகளை கவனமாக எதிர்கொண்ட அவர், பொறுமையாக வெயிட்டிங் கேம் ஆடி தன் ரிதத்தை கண்டுபிடித்தார்.
பிட்சில் சில விரிசல்கள் காரணமாக பந்துகள் சுழலத் தொடங்கின. 3வது ஓவரில் சிராஜின் பந்தை பவுண்டரியாக அடித்து ஹெட் தொடங்கினார்; பின்னர் சிராஜ் லெந்த்தில் பிழை செய்தபோது மேலும் இரண்டு பவுண்டரிகள் வந்தன. பிரசித் கிருஷ்ணாவின் முதல் ஓவரிலும் ஒரு அழகான பவுண்டரி அடித்தார். பவர் ப்ளே முடிவடையும் முன் சிராஜின் பந்தை கவரில் தூக்கி அடித்தார்; அதனால் இந்திய பந்துவீச்சு இன்று சவால்களைச் சந்திக்கும் என தோன்றியது. ஆனால் அதே சிராஜின் அடுத்த பந்தை கட் செய்ய முயன்ற ஹெட், 30 யார்டு வட்டத்துக்குள் இருந்த பிரசித் கிருஷ்ணாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
ஹெட் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். எனினும், 76 இன்னிங்ஸ்களில் 3,000 ஒருநாள் ரன்களை எடுத்து ஸ்மித்தின் சாதனையை முறியடித்தார். இந்த மைல்கல்லை வேகமாக எட்டிய ஆஸ்திரேலியர்களில் மூன்றாவது இடத்தில் ஜார்ஜ் பெய்லி மற்றும் மைக்கேல் பெவன் (இருவரும் 80 இன்னிங்ஸ்களில்) உள்ளனர்.
மொத்தம் 2,839 பந்துகளில் ஹெட் இந்த மைல்கல்லை அடைந்துள்ளார். இதே சாதனையை கிளென் மேக்ஸ்வெல் 2,440 பந்துகளில், ஜாஸ் பட்லர் 2,533 பந்துகளில், ஜேசன் ராய் 2,820 பந்துகளில் எட்டியிருந்தனர் என்பதும் கவனிக்கத்தக்கது.