சிட்னியில் இன்று கடைசி ஒருநாள் — சாதனை நோக்கில் ஆஸ்திரேலியா; ஆறுதல் வெற்றியை நோக்கும் இந்தியா!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு சிட்னியில் நடைபெறுகிறது.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் மூன்று ஒருநாள் ஆட்டங்களில் இரண்டு ஆட்டங்களில் தோல்வியடைந்து தொடரை ஏற்கனவே இழந்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட பெர்த் போட்டியில் 7 விக்கெட்களால் தோல்வியடைந்த இந்தியா, அடிலெய்டு ஆட்டத்தில் 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் நெருக்கடியான தோல்வியை சந்தித்தது.
தொடரை இழந்த நிலையில், இந்திய அணி இன்று கடைசி ஆட்டத்தில் ஆறுதல் வெற்றியைப் பெற உற்சாகமாக களமிறங்குகிறது. இரண்டாவது ஆட்டத்தில் ரோஹித் சர்மா 97 பந்துகளில் 73 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடினார். ஆனால் விராட் கோலி தொடர்ச்சியாக இரண்டாவது ஆட்டத்திலும் ரன்கள் எடுக்காமல் பவிலியன் திரும்பி ஏமாற்றமளித்தார்.
இவர்கள் இருவருக்கும் இது கடைசி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணமாக இருக்கக்கூடும் என்பதால், இன்று சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்கக்கூடும். ஷுப்மன் கில்லும் தனது பேட்டிங்கில் மேம்பாடு காண வேண்டிய நிலை உள்ளது.
கடந்த ஆட்டத்தில் 61 ரன்கள் எடுத்த ஸ்ரேயஸ் ஐயர் மீண்டும் ஒரு நல்ல இன்னிங்ஸ் ஆட வாய்ப்பு உள்ளது. அதேபோல் அக்சர் படேல் தொடர்ந்து பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் உறுதியான பங்களிப்பு வழங்கி வருவதால், அவர் மீண்டும் முக்கிய பங்கு வகிக்கலாம்.
சிட்னி மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு ஏற்றதாக இருப்பதால், குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்படலாம். அவர் சேர்க்கப்பட்டால், வாஷிங்டன் சுந்தர் அல்லது நிதிஷ் குமார் ரெட்டி இடம் இழக்கலாம். வேகப்பந்து வீச்சில் ஹர்ஷித் ராணாவுக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா களமிறங்க வாய்ப்பு உண்டு.
மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றி சாதனை படைக்கும் நோக்கில் களமிறங்குகிறது. இதுவரை ஒருநாள் தொடரில் இந்தியாவை முழுமையாக வென்றது இல்லை. இன்று வெற்றி பெற்றால், அது வரலாற்றுச் சாதனையாக அமையும்.
அடிலெய்டில் இளம் வீரர்களான மேத்யூ ஷார்ட், மிட்செல் ஓவன், கூப்பர் கானொலி ஆகியோர் அற்புதமான ஆட்டம் ஆடி அணியை வெற்றிக்குத் தள்ளினர். மிட்செல் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் விரைவில் ஆட்டமிழந்த போதிலும், இளம் வீரர்கள் அழுத்தமின்றி சிறப்பாக விளையாடினர். மேட் ரென்ஷாவும் உறுதியான பங்களிப்பு அளித்தார்.
இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் புதிய ஆல்ரவுண்டரான ஜேக் எட்வர்ட்ஸ் அறிமுகமாகலாம். அதேசமயம் மேட் குனேமன், ஆடம் ஸாம்பா இணைந்து சுழலில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவால் விடக்கூடும். தொடரை வென்றுள்ளதால் ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் மிட்செல் ஸ்டார்க்கு ஓய்வு வழங்கப்படலாம்.
சிட்னி புள்ளிவிவரம்:
சிட்னி மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை 19 முறை மோதியுள்ளன. இதில் ஆஸ்திரேலியா 16 ஆட்டங்களில் வென்றுள்ளது, இந்தியா 2008 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் முடிவின்றி முடிந்தது.