“ஏழு சகோதரிகள்” மாநிலங்கள் குறித்து பேச்சு: மீண்டும் சர்ச்சையில் முகமது யூனுஸ்
வங்கதேசத்தில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், முன்னாள் இடைக்கால அரசின் ஆலோசகர் முகமது யூனுஸ், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் குறித்து பேசி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
18 மாதங்களுக்கும் மேலாக முகமது யூனுஸ் தலைமையில் செயல்பட்டு வந்த இடைக்கால அரசு சமீபத்தில் முடிவுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களை வென்ற வங்கதேச தேசியவாத கட்சி ஆட்சி அமைத்துள்ளது. அக்கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார்.
ஜூலை சாசனத்தின்படி புதிய உறுப்பினர்கள் பதவியேற்க வேண்டும் என்ற யூனுஸின் கோரிக்கையை பிரதமர் தாரிக் ரஹ்மான் நிராகரித்தார். இதையடுத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றனர்.
பதவியில் இருந்து விலகும் முன் யூனுஸ் ஆற்றிய கடைசி உரையில், வங்கதேசம் இனி பிற நாடுகளின் ஆலோசனைகளுக்கு அடிபணியும் நாடாக இருக்காது என்றும், சுயநலன்களைப் பாதுகாக்கும் வெளிநாட்டு கொள்கையை பின்பற்றும் என்றும் தெரிவித்தார்.
மேலும், சீனாவுடனான உறவை வலுப்படுத்த வேண்டும் என்றும், டீஸ்டா நதி மறுசீரமைப்பு திட்டம் மற்றும் நீல்பமாரியில் 1,000 படுக்கைகள் கொண்ட சர்வதேச மருத்துவமனை திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த டீஸ்டா நதி திட்டம் இந்தியாவின் “சிக்கன் நெக்” பகுதிக்கு அருகில் அமைந்துள்ளதால், அது இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் சீனாவுக்குச் சென்ற யூனுஸ், சீன அதிபரை சந்தித்து ஒன்பது ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருந்தார்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை “ஏழு சகோதரிகள்” என குறிப்பிட்ட யூனுஸ், அவை நிலத்தால் சூழப்பட்ட பகுதிகள் என்றும், வங்கதேசமே அவற்றுக்கான கடல் பாதுகாவலன் என்றும் தெரிவித்திருந்தார். இதனை சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்பாக மாற்றலாம் என்றும் அவர் கூறினார். இக்கருத்தை தற்போது தனது கடைசி உரையிலும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு பதிலளித்த முன்னாள் இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் கன்வால் சிபல், பூட்டான் மற்றும் நேபாளத்தை இறையாண்மை கொண்ட நாடுகளாகக் குறிப்பிடும் யூனுஸ், இந்தியாவை தவிர்த்து “ஏழு சகோதரிகள்” பற்றி மட்டும் பேசுவது அவரது ஆபத்தான மனநிலையை வெளிப்படுத்துவதாக விமர்சித்துள்ளார்.
அதேபோல், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி, யூனுஸ் தனது தோல்விகளை மறைக்க இந்தியாவை வெளிப்புற வில்லனாக சித்தரிக்க முயன்றதாக சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர், இடைக்கால அரசின் ஆலோசகரான யூனுஸ், வங்கதேசத்தின் வெளியுறவுக் கொள்கையை இந்தியாவுக்கு எதிரான பாதையில் மாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அவரது காலகட்டத்தில் சீனா மற்றும் பாகிஸ்தானுடன் உறவு வலுப்படுத்தப்பட்டதுடன், இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், அந்நாட்டில் இந்துக்கள் மீதான வன்முறை அதிகரித்ததாகவும், இந்திய தூதரகங்கள் முற்றுகையிடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
யூனுஸ் தலைமையிலான காலகட்டத்தில் வங்கதேசம் வெளிநாட்டு உறவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடையவில்லை என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், பதவியில் இருந்து விலகும் போதும் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை அவர் தொடர்ந்து வெளியிட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.