விஷ தவளையின் நச்சால் அலெக்ஸி நவால்னி கொல்லப்பட்டாரா? – சர்வதேச அளவில் பரபரப்பு
ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான Alexei Navalny மரணம் தொடர்பாக, விஷ தவளையின் நச்சை பயன்படுத்தி அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற தகவல் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய அதிபர் Vladimir Putin தலைமையிலான அரசை கடுமையாக விமர்சித்து வந்த நவால்னி, ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் போராட்டங்கள் மூலம் உலக கவனத்தை ஈர்த்தவர். 2020-ஆம் ஆண்டு விஷம் கொடுத்து கொலை செய்ய முயற்சி நடந்த நிலையில், ஜெர்மனியில் சிகிச்சை பெற்று உயிர் தப்பினார். பின்னர் நாடு திரும்பியபோது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிப்ரவரி மாதத்தில், ரஷ்யாவின் ஆர்க்டிக் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தார். அவரது மரணம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது. தனது கணவர் மரணத்திற்கு புதின்தான் காரணம் என நவால்னியின் மனைவி Yulia Navalnaya குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கையில், தென் அமெரிக்காவில் காணப்படும் விஷ டார்ட் தவளையின் நச்சை பயன்படுத்தி நவால்னி கொல்லப்பட்டிருக்கலாம் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அந்த தவளைகளின் உடலில் இருந்து பெறப்படும் “எபிபடிடின்” என்ற நச்சுப்பொருள், மார்பினை விட 200 மடங்கு சக்திவாய்ந்தது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த நச்சு மனித உடலில் செலுத்தப்பட்டால், தசை இழுப்பு, வலிப்பு, இதயத் துடிப்பு குறைதல், சுவாச கோளாறு போன்றவை ஏற்பட்டு மரணத்திற்கு வழிவகுக்கும்.
நவால்னியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில், இந்த எபிபடிடின் நச்சு இருப்பதாக ஆய்வுகள் உறுதி செய்துள்ளதாக ஐரோப்பிய நாடுகள் தெரிவித்துள்ளன. மேலும், இந்த நச்சு ஆய்வகங்களிலும் தயாரிக்கப்படக்கூடியது என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நவால்னி இயற்கை காரணங்களால் உயிரிழந்ததாக ரஷ்ய அரசு விளக்கம் அளித்துள்ளது. தவளை விஷம் குறித்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ள ரஷ்யா, இது மேற்கத்திய நாடுகளின் அரசியல் பிரச்சாரம் என விமர்சித்துள்ளது.
இந்த விவகாரம் தற்போது உலக அரசியல் அரங்கில் பெரும் விவாதமாக மாறியுள்ள நிலையில், நவால்னி மரணத்தின் உண்மையான காரணம் குறித்து சர்வதேச விசாரணை கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன.