டெல்லியில் சர்வதேச ஏஐ உச்சி மாநாடு: பிரதமர் மோடி தொடக்கம்
டெல்லியில் நடைபெறும் ஐந்து நாள் சர்வதேச செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
2023ஆம் ஆண்டு பிரிட்டனின் பக்கிங்காமிலும், 2024ஆம் ஆண்டு தென்கொரியாவின் தலைநகர் சியோலிலும், 2025ஆம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலும் இந்த மாநாடு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, நடப்பாண்டுக்கான ஏஐ உச்சி மாநாட்டை இந்தியா ஏற்று நடத்தி வருகிறது.
டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, மாநாட்டின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியையும் பார்வையிட்டார்.
மக்கள், பூமி, முன்னேற்றம் ஆகிய மூன்று கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் இந்த மாநாட்டில், ஏழு முக்கிய கருப்பொருள்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த மாநாட்டில் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், பிரேசில் அதிபர் லூலா டா சில்வா உள்ளிட்ட 45 நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
மேலும், கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் துணைத் தலைவர் பிராட் ஸ்மித் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.