மாணவியின் துண்டான கைவிரல்களை குப்பையில் வீசிய ஆசிரியர் மீது வழக்கு
கர்நாடக மாநிலம் தும்கூர் அருகே உள்ள கோலூர் பகுதியில் செயல்பட்டு வந்த அரசு தொடக்கப் பள்ளியில், மாணவியின் கைவிரல்கள் விபத்தில் துண்டான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயின்று வந்த சின்மயி தேவி என்ற மாணவி, சம்பவ நாளன்று மதிய உணவுக்காக வரிசையில் நின்றிருந்த போது, இரும்புக் கதவில் அவரது கைவிரல்கள் சிக்கி துண்டானதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், காயமடைந்த மாணவியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், துண்டான கைவிரல்களை ஆசிரியர் குப்பையில் வீசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர், பள்ளி நிர்வாகம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பெற்றோர் மற்றும் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.