ஷாங்காயில் திடீரென உள்வாங்கிய சாலை: அலறியடித்து ஓடிய பொதுமக்கள்
ஷாங்காய்: சீனாவின் வர்த்தகத் தலைநகரான நகரில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த சாலை ஒன்று திடீரென உள்வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.
அதிக மக்கள் நடமாட்டமும் போக்குவரத்து நெரிசலும் காணப்படும் பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது சாலை பகுதி திடீரென சரிந்து பள்ளமாக மாறியது.
இதனால் அங்கு இருந்த பொதுமக்களும் தொழிலாளர்களும் அதிர்ச்சியடைந்து அலறியடித்தபடி பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர். சம்பவத்தில் கட்டுமானப் பொருட்கள் பள்ளத்தில் விழுந்ததுடன், அருகிலிருந்த சில கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சம்பவத்துக்குப் பின்னர் அந்தப் பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு, சாலையை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சம்பவத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.





