சபரிமலை கொடிமர தங்கத்தில் முறைகேடு? 27 பேரிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு
சபரிமலை ஐயப்பன் கோயிலின் கொடிமரத்திற்காக பக்தர்களிடமிருந்து பெறப்பட்ட தங்க நன்கொடைகளில் தவறுகள் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், நடிகர்கள் மோகன்லால், சுரேஷ் கோபி உள்ளிட்ட 27 பேரிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை தீர்மானித்துள்ளது.
ஏற்கனவே, கோயிலில் பதிக்கப்பட்டிருந்த தங்கத் தகடுகளில் இருந்து தங்கம் காணாமல் போனது தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன. மேலும், அபிஷேக நெய் விற்பனை தொடர்பாகவும் பெரிய அளவில் நிதி முறைகேடு நடைபெற்றது கண்டறியப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட புதிய கொடிமரத்திற்காக சேகரிக்கப்பட்ட தங்கத்திலும் முறைகேடு ஏற்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி, ஒரு மாத காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க கேரள உயர்நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மலையாளத் திரைப்பட உலகைச் சேர்ந்த மோகன்லால், சுரேஷ் கோபி, அவரது மகன் மற்றும் நடிகரான கோகுல், இயக்குநர்-நடிகர் ரஞ்சித் பணிக்கர் உள்ளிட்ட 27 பேர் கொடிமர நன்கொடையாக தங்கம் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் திரைப்படத் துறையைச் சேர்ந்த 8 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
ஆனால், தேவசம் போர்டு பராமரிக்கும் பதிவுகளில் தனிப்பட்ட பெயர்கள் குறிப்பிடப்படாமல் ‘பக்தர்’ என மட்டுமே பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், தங்க நன்கொடைக்கு உரிய ரசீது வழங்கப்படாததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த சூழலில், சம்பந்தப்பட்ட 27 பேரிடமும் அவர்கள் வழங்கிய தங்கத்தின் அளவு மற்றும் தொடர்புடைய விவரங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.