திடீரென செயலிழந்த விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் கணக்கு – ரசிகர்கள் அதிர்ச்சி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான விராட் கோலி, சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராம் மூலம் ஆண்டுக்கு கோடிக்கணக்கான வருமானம் ஈட்டுகிறார் என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
முன்னாள் இந்திய அணித் தலைவர் விராட் கோலி, டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டும் பங்கேற்று வருகிறார். அவருக்கு உலகம் முழுவதும் எண்ணற்ற ரசிகர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 27 கோடி பேர் அவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.
இந்த சூழலில், நள்ளிரவு நேரத்தில் விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் கணக்கு திடீரென செயலிழந்தது. அவரது பக்கத்தை அணுக முயன்ற ரசிகர்களுக்கு, அந்த கணக்கு கிடைக்கவில்லை என தகவல் தோன்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் குழப்பமடைந்த சில ரசிகர்கள், கோலியின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,
“கோலியின் கணக்கு எங்கே?”,
“என்ன நடந்தது?”
என கேள்வி எழுப்பும் கருத்துகளை பதிவு செய்தனர்.
பல மணி நேரங்கள் செயலிழந்த நிலையில் இருந்த அந்த இன்ஸ்டாகிராம் கணக்கு, வெள்ளிக்கிழமை காலை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, விராட் கோலி சமூக வலைதளங்களின் மூலம் பெறும் வருமானம் குறித்து விவாதங்கள் எழுந்தன. அதன்படி, அவர் ஸ்பான்சர் செய்யப்பட்ட விளம்பர பதிவுகள் மூலம் மட்டும் ஆண்டுக்கு சுமார் 14 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.